‘மெட்ராஸ் கபே’ திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகமான ராஷி கன்னா, பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது பல்வேறு மொழிகளில் கவனம் செலுத்தி வரும் அவர், தனது திரைப்பயணத்தில் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளார்.
ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஃபார்ஸி 2’ வெப் தொடரிலும், ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்திலும் ராஷி கன்னா நடித்து வருகிறார். மேலும், அக்ஷய் குமார் ஜோடியாக புதிய காமெடி திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.திரையுலகில் காலடி எடுத்து வைத்து 13 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தனது பயணத்தை நினைவுகூர்ந்து ராஷி கன்னா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த 13 ஆண்டுகள் நீண்ட காலமாக இருந்தாலும், நடிப்பை ஒரு வேலை அல்லது வாய்ப்பாக ஒருபோதும் பார்க்காமல் பெருமையாகவே கருதியதால் காலம் மிக வேகமாக நகர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படத்தை திரும்பிப் பார்க்கும்போது தான் ஏன் சினிமாவுக்கு வந்தேன் என்பது மீண்டும் நினைவுக்கு வருவதாகவும், தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை சொல்ல அந்தப் படம் வாய்ப்பளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது திரைப்பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் துணையாக இருந்த சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் ராஷி கன்னா தெரிவித்துள்ளார்.
