பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படக்குழு தற்போது தீவிரமான புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து அளித்த பேட்டி ஒன்றில், எஸ்.ஜே. சூர்யா உடன் பணியாற்றிய அனுபவத்தை பிரதீப் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “எஸ்.ஜே. சூர்யா சாருடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு முதல் அனுபவம். அது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது. நான் அவரிடம் உதவி இயக்குநராக சேர முயன்றேன். அப்போது அவர் ‘இசை’ திரைப்படத்தை இயக்கி கொண்டிருந்தார். கல்லூரி படிப்பை முடித்ததும் அவரிடம் உதவி இயக்குநராக சேர சென்றேன். ஆனால், நான் அப்போது முழுமையாக தயார் நிலையில் இல்லை.
தமிழில் தட்டச்சு செய்வது, புத்தகங்கள் வாசிப்பது போன்ற விஷயங்களில் எனக்கு அனுபவம் இல்லை. எனினும், அவர் எனக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி, அன்புடன் அனுப்பி வைத்தார். அந்த அறிவுரைகளை நான் என் வாழ்க்கையில் கடைபிடித்தேன். நான் முதன்முதலில் கதை சொல்லிய நடிகர் எஸ்.ஜே. சூர்யா சார்தான். அவரால் அந்தக் கதையை ஏற்க முடியவில்லை என்றாலும், சில முக்கியமான கருத்துகளை பகிர்ந்தார். அந்த கருத்துகளை நான் என் முதல் படத்தில் பயன்படுத்தினேன். அவருடன் சேர்ந்து நடிப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. எனக்கு பிடித்த நடிகர்களில் அவர் முக்கியமானவர்.இந்த படத்தில் ஒரு காட்சியை நடிக்க சிரமப்பட்டபோது, அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்று அவர் நேரடியாக சொல்லிக் கொடுத்தார். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.
