இந்திய திரைப்பட உலகில் பான் இந்தியா அளவில் புகழ்பெற்ற சில நடிகர்கள் தற்போது தங்களது முழு சம்பளத்தையும் முன்பே பெற்றுக்கொள்ளாமல், படத்தின் லாபத்தில் பங்கெடுக்கும் முறையைத் தேர்வு செய்து வருகின்றனர். அதேபோல், சிலர் அந்தப் படங்களில் இணை தயாரிப்பாளர்களாகவும் செயல்படத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், கன்னடத் திரையுலகில் ‘கேஜிஎப் 2’ திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றவர் யஷ். அவர் தற்போது கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் ‘டாக்சிக்’ திரைப்படத்தையும், இந்தியில் தயாராகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தையும் இணை தயாரிப்பாளராக செயல்பட்டு உருவாக்கி வருகிறார். இவ்விரு படங்களும் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் பான் இந்தியா திரைப்படங்களாகும்.
ஒரு சாதாரண பஸ் ஓட்டுனரின் மகனாகப் பிறந்த யஷ், ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துத் தனது பயணத்தை தொடங்கினார். பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து அனுபவம் சேர்த்துக் கொண்டு, அதன் பிறகு திரைப்பட உலகில் நுழைந்து முன்னணி நடிகராக உயர்ந்தார். தன்னுடைய கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் மூலம் இன்று இந்திய அளவில் அறியப்பட்ட நடிகராக மட்டுமின்றி, பான் இந்தியா திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
