என்ன சொல்ல வருகிறது கயல் சந்திரன் நடிப்பில் வெளியாகவுள்ள‘சிங்கா’ ?

ருத்ரம் சினிமாஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜ துரை சிங்கம் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘சிங்கா’. இந்த படத்தில் ‘கயல்’ சந்திரன் கதாநாயகனாக நடித்துள்ளார். மலையாள நடிகைகளான சிஜா ரோஸ் மற்றும் மீனாட்சி ரவீந்திரன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இதனுடன் ஆதித்யா கதிர், சூப்பர் குட் சுப்ரமணி, டி.எஸ்.ஆர்., மேலும் மலையாள நகைச்சுவை நடிகர் அரிஸ்டோ சுரேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி இசையமைத்துள்ளார்.


இந்தக் கதையின் மையத்தில் ‘சிங்கா’ எனப்படும் அன்பான லாப்ரடார் நாய் முக்கிய பாத்திரமாக அமைந்துள்ளது. அதன் அன்பும், உணர்ச்சிப்பூர்வமான தொடர்பும் மூலம் மனிதர்களின் மனங்களை எளிதில் கவரும் தன்மை கொண்டதாக கதை அமைந்துள்ளது. மனிதன் மற்றும் செல்லப்பிராணி இடையிலான நட்பு, அன்பு, நம்பிக்கை மற்றும் வாழ்க்கைப் பயணம் ஆகியவை எவ்வாறு ஒருவரை ஒருவர் மாற்றுகின்றன என்பதை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த படம் குறித்து நடிகர் சந்திரன் தெரிவித்ததாவது: “சிங்கா திரைப்படம் எனக்கு பல்வேறு அனுபவங்களையும் உணர்வுகளையும் அளித்த மறக்கமுடியாத பயணமாகும். இது ஒரு நாயை மையமாகக் கொண்ட சாதாரண கதை அல்ல; மனிதனின் உணர்வுகளையும், செல்லப்பிராணியின் தூய்மையான பாசத்தையும் இணைக்கும் ஒரு அழகான முயற்சி. குறிப்பாக, நாயுடன் இணைந்து நடிப்பது மிகுந்த சவாலான அனுபவமாக இருந்தது. நாய்களும், குழந்தைகளும் நீண்ட நேரம் கட்டுப்பாட்டில் இருக்காது என்பதால், இந்தப் படப்பிடிப்பின் போது பொறுமையின் அவசியத்தை நான் ஆழமாக உணர்ந்தேன். அந்த சவாலான சூழ்நிலைகளை இயக்குநர் மிகுந்த பொறுமையுடன் கையாள்ந்த விதம் மிகவும் பாராட்டத்தக்கது. ‘சிங்கா’ என்னை கவர்ந்ததைப் போலவே, ரசிகர்களையும் கண்டிப்பாக கவரும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.


தனிப்பட்ட முறையில், இந்த படம் வெளியான பிறகு என் சிறிய மகன் அதை எப்படி ஏற்றுக்கொள்வான் என்பதைக் காண ஆவலாக உள்ளேன். அவனுக்கு விலங்குகள் மற்றும் பறவைகள் மீது அன்பு இருந்தாலும், நாய்களைப் பார்த்தால் சிறிது பயம் உள்ளது. இந்த திரைப்படம் அவனுடைய அந்த எண்ணத்தை மாற்றும் என நம்புகிறேன். படப்பிடிப்பின் போது அந்த நாயின் அன்பை உணர்ந்தபோது, மனிதர்கள் கூட அந்த மாதிரி தூய்மையான அன்புடன் வாழ்ந்தால் இந்த உலகம் இன்னும் அழகாக மாறும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. இந்த படம் அனைவரின் மனதையும் கவரும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading