தமிழ் திரைப்படங்களில் ‘மாஸ்டர்’, ‘கைதி’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர் அர்ஜுன் தாஸ். இதனைத் தொடர்ந்து ‘அநீதி’, ‘ரசவாதி’, ‘போர்’ போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது, அர்ஜுன் தாஸ் நடிகை அதிதி ஷங்கருடன் இணைந்து ‘ஒன்ஸ் மோர்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.
‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ போன்ற படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. காதல் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார். மேலும், இசையமைப்பாளராக ஹேஷாம் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனால், இப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது.
இந்த நிலையில், ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மலையாள நடிகை சோனா ஓலிக்கலை அறிமுகப்படுத்தும் வகையில் இந்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அவர் ‘இந்திரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக ‘வெயில்’ (2022), ‘கடகன்’ (2024), ‘ஓ மேரி லைலா’ (2022) போன்ற மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
