ராமாயணக் கதையை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் ஏராளமான திரைப்படங்களும் தொலைக்காட்சி தொடர்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மேடை நாடகங்களிலிருந்து தொடங்கி, இன்றைய நவீன 3டி தொழில்நுட்பம் வரை, ராமாயணக் கதை தலைமுறைகளைத் தாண்டியும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மிகப்பெரிய பொருட்செலவில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ‘ராமாயணா’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி நடித்துள்ளனர். ராவணன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்துள்ளார். இந்திய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் பாகம் 2026ஆம் ஆண்டு தீபாவளியிலும், இரண்டாம் பாகம் 2027ஆம் ஆண்டு தீபாவளியிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாக காரணமாக இருக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்று, இந்தப் படத்தில் பணியாற்றும் இசையமைப்பாளர்கள். சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஏ.ஆர். ரகுமானும், உலகப் புகழ்பெற்ற ‘லயன் கிங்’, ‘கிளாடியேட்டர்’, ‘இன்டர்ஸ்டெல்லார்’ போன்ற படங்களுக்கு இசையமைத்த ஹான்ஸ் ஜிம்மரும் இணைந்து இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்கள். இவர்கள் இருவரும் தலா இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் காட்சித் தொகுப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. அதில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வங்களின் காட்சிகளும், ராமர் மற்றும் ராவணன் இடையேயான போர்க்கள காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. அனுமனாக நடித்துள்ள சன்னி தியோல் தோன்றும் காட்சியும் அதில் இடம் பெற்றது. சுமார் மூன்று நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் மிகப்பெரிய அளவிலான கணினி காட்சிகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக இந்த திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ‘ராமாயணா’ திரைப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தின் புதிய காட்சித் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் பயன்படுத்தப்பட்டுள்ள காட்சியமைப்பு தரம், இந்தியத் திரைப்படங்களின் தரத்தை மேலும் உயர்த்தும் வகையில் இருப்பதாக பேசப்படுகிறது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் காட்சியளிக்கும் போது பார்வையாளர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
