‘ஹேப்பி படேல்’, ‘பார்டர் 2’, ‘சுபேதார்’ ஆகியவற்றில் கதாநாயகியாக நடித்திருந்த மோனா சிங், ரசிகர்களின் மனதை கவர்நதிருந்தார். அடுத்து அவர் நடித்துள்ள ‘மா கா சம்’ எனும் இணையத் தொடர் நாளை (ஏப்ரல் 3) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு நடைபெற்ற விளம்பர நிகழ்ச்சியில் மோனா சிங் பேசுகையில், “இந்த ஆண்டில் தொடர்ந்து எனது படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இது எனக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. நான் நடித்த அனைத்து படங்களிலும் எனது நடிப்பை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். இது எனக்கு மட்டுமல்லாமல் என்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் பெருமையாக உள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “பொதுவாக நான் அனைவரின் ஆலோசனைகளையும் கேட்பேன். ஆனால் இறுதியில் என்னுடைய உள்ளுணர்வை பின்பற்றி செயல்படுவேன். இரவு தூங்கும் நேரம் வரும் வரை, நான் நடித்துக் கொண்டிருக்கும் கதைகள் மற்றும் கதாபாத்திரங்களைப் பற்றியே சிந்தித்து கொண்டிருப்பேன். சவாலான கதாபாத்திரங்கள் வந்தால் உடனே அதை ஏற்றுக்கொள்வேன். எப்போதும் புதுமையான விஷயங்களை செய்ய வேண்டும் என்ற எண்ணமே எனக்கு அதிகம் உள்ளது.
ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க விரும்பவில்லை. பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் என்னை சோதித்து பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். தற்போது, இதுவரை நான் நடித்திராத எதிர்மறை தன்மை கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்தாலும், நான் சிறிய இடைவெளி எடுக்க முடிவு செய்தேன். வாழ்க்கை என்பது வாழ்வதற்கும், பயணம் செய்வதற்குமானது என்பதால், அந்த இடைவெளியில் என் பெற்றோர்களுடனும், வெளிநாட்டில் வசிக்கும் என் சகோதரியுடனும் நேரத்தை செலவிட்டேன்” என்று பகிர்ந்துகொண்டார்.
