நடிகரும் இயக்குநருமான கென் கருணாஸ் நாயகனாகவும் இயக்குநராகவும் அறிமுகமான திரைப்படம் ‘யூத்’. இந்தப் படத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி, அனிஷிமா, மீனாக்ஷி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் வெளியான பிறகு திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்த இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் பெரிய அளவில் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், இந்தப் படத்தின் பாடல்கள் குறித்து ஜி.வி.பிரகாஷ் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “ ‘யூத்’ திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் இன்று ஹிட் ஆகியுள்ளன. அந்த பாடல்களை நான் என்னுடைய சொந்த ஆடியோ லேபிள் மூலமாகவே வெளியிட்டேன். ஆரம்பத்தில் ஒரு ஆடியோ லேபிளுக்கு இந்தப் பாடல்களை எடுத்துச் சென்றபோது, இது ஒரு அறிமுக ஹீரோ நடித்த படம் என்பதால் மிகவும் குறைந்த விலைக்கே வாங்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர். நான் இசையமைப்பாளராக இருந்தாலும், ஹீரோ ஒரு புதியவர் என்பதால் தான் அந்த அளவுக்கு குறைந்த மதிப்பீட்டை கூறினார்கள். பெரிய நட்சத்திரங்கள் நடித்த படமாக இருந்திருந்தால், இதற்கும் இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு அதிகமாக பணம் கொடுத்திருப்பார்கள்.
மேலும், அந்தப் படத்தையே அவர்கள் குறைத்து மதிப்பிட்டனர். இந்தப் படத்தில் எந்தப் பாடலும் வைரலாகாது என்று நினைக்கிறோம் என்றும் அவர்கள் கூறினர். அதனால், நான் அந்த பாடல்களை என் சொந்த லேபிளில் வெளியிட முடிவு செய்து ‘முட்டக் கலக்கி’ பாடலை வெளியிட்டேன். அது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தையும், அதில் இடம்பெற்ற பாடல்களையும் அவர்கள் தவறாக மதிப்பிட்டிருந்தனர் என்பது பின்னர் தெளிவானது. அதன் பிறகு, முதலில் இந்தப் பாடல்களை வாங்க மறுத்த அதே ஆடியோ லேபிள் மீண்டும் வந்து, அவர்கள் முன்பு கூறிய விலையை விட ஐந்து மடங்கு அதிகமாக கொடுக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்தனர். ஆனால், அப்போது நாங்கள் அதனை ஏற்காமல் மறுத்துவிட்டோம்” என்று கூறினார்.
