2019ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியை பெற்றது. அந்த படத்தின் இயக்குநர் ஸ்ரீ செந்தில் தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘காளிதாஸ் 2’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பரத், அஜய் கார்த்திக், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ, அபர்னதி, டி.எம். கார்த்திக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
மேலும், ‘பூவே உனக்காக’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை சங்கீதா, இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் வருகை தந்துள்ளார். இந்த படம் வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பட வெளியீட்டை முன்னிட்டு நடிகர் பரத் அளித்த பேட்டியில், தனது திரையுலக பயணத்தை குறித்து மனம் திறந்து பேசினார்.
அதில், எதையும் சாதிக்காமல் இருந்தவர்கள் கூட எங்கோ உயர்ந்து சென்று விட்டார்கள் என்று சிலர் கூறும்போது அது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. ஆனால் அது அவர்களின் அதிர்ஷ்டம் மற்றும் விதி. என் படங்களை ரசிகர்கள் ஏற்காததற்கு நான் கதைகளை தேர்வு செய்த விதத்தில் செய்த தவறுகளே காரணம். இருந்தாலும் நான் இன்னும் இந்த போட்டியில் இருந்து விலகவில்லை. ஒருநாள் சஞ்சு சாம்சன் போல நான் ஒரு சிறந்த வெற்றியை பெற்று உயர்ந்த நிலையை அடைவேன். என்னுடைய சிறந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் இன்னும் காத்திருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
