பாலிவுட் திரைப்பட உலகில் இயக்குநராகவும் நடிகராகவும் தனித்துவமான அடையாளம் கொண்ட அனுராக் காஷ்யப், தென்னிந்திய திரைப்படங்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக அறியப்படுகிறார். இதன் காரணமாகவே அவர் தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘மகாராஜா’ போன்ற திரைப்படங்களில் நடித்ததுடன், தற்போது தெலுங்கில் முதன்முறையாக ‘டகாய்ட்’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அதிவி சேஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் அனுராக் காஷ்யப் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது கதாபாத்திரம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டபோது, “இந்த படத்தின் கதை முதலில் சொல்லப்பட்டபோது, நான் போலீஸ் அதிகாரியாக நடிக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் அது சாதாரண ஹீரோ-வில்லன் மோதலாக இல்லாமல், ஒரு காதல் கதையின் மையமாக அமைந்தது. எனவே இந்த கதையும் கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்தது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் தன்னை ஒரு சைக்கோ அல்லது மூர்க்கமான மனிதராக காட்டவில்லை என்றும், தனது வயதுக்கு ஏற்ற ஒரு இயல்பான மனிதரைப் போலவே நடித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த படம் ரசிகர்களிடம் வேறுபட்ட அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
