நடிகர் ராம் சரண் நடித்திருக்கும் ‘பெத்தி’ திரைப்படம் அடுத்த மாதம் 30-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தற்போது இந்த வெளியீட்டு தேதி மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் புச்சி பாபு சானா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் ராம் சரண் மல்யுத்த வீரராக நடித்துள்ளதால், அவரது உடல் அமைப்பு தொடர்பான போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கவனத்தை பெற்றது.
இந்த நிலையில், அந்த உடல் அமைப்பை உருவாக்க ராம் சரண் எதிர்கொண்ட சவால்கள் குறித்து இயக்குநர் புச்சி பாபு சானா சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், உண்மையான மல்யுத்த வீரரின் உடல் அமைப்பை பெறுவதற்காக ராம் சரண் எட்டு மாதங்கள் தொடர்ந்து கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதாக தெரிவித்தார். உடல் தசைகளை செம்மைப்படுத்தி, கதாபாத்திரத்தின் உடல் மொழி மற்றும் நடைமுறைகளை முழுமையாக கற்றுக்கொள்ள அவர் பெரும் உழைப்பை எடுத்துள்ளார்.
மேலும், ஐயப்பன் விரதத்தில் இருந்த காலத்திலும் கூட அவர் தனது உடற்தகுதியை கவனித்து வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் கடுமையான ஆன்மீக ஒழுக்கத்தை பின்பற்றியிருந்தாலும், ஒரு நாளும் பயிற்சியை நிறுத்தாமல் தொடர்ந்து உழைத்துள்ளார். சைவ உணவையே கடைபிடித்து தனது உடலை பராமரித்தது, அவரது அர்ப்பணிப்பு மற்றும் ஒழுக்கத்தை வெளிப்படுத்துகிறது என்று இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.
