இலங்கைத் தமிழர்கள் இணைந்து ‘பொம்மை’ என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இந்தப் படத்தை நவயுகா குகராஜா இயக்கியுள்ளார். மதுநிஹிரன்யா அழகக்கோன் வற்சு ஒளிப்பதிவு செய்துள்ளார். எம். ரஜனிகாந்த் இசையமைத்துள்ளார். மேலும் நவயுகா குகராஜா, யசோதா, திருமலை பிரணவன், சுகிர்தன் கிறிஸ்துராஜா, ரெக்சன் விக்கி, மல்லிகா கீர்த்தி, ஐங்கரன் ஜெனொஷியா உள்ளிட்ட பல இலங்கை கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். பல்வேறு நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்றுள்ள இந்தப் படம் விரைவில் தமிழ்நாட்டில் வெளியாக உள்ளது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் பாஸ்கரன் கந்தையா கூறுகையில், “இந்தப் படத்தை பிரான்ஸ், கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வந்தவர்கள் பார்த்துள்ளனர். அதில் கனடாவில் இருந்து வந்த ஒருவர், உடனடியாக தனது நாட்டில் இந்தப் படத்தை வெளியிட உரிமையை கேட்டு இருந்தார். அந்த அளவுக்கு இந்த திரைப்படம் அனைவரிடமும் நல்ல கருத்துக்களை பெற்றுள்ளது.
ஈழத் தமிழர்களின் படைப்புகள் உலக மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பதே எனது முதன்மையான நோக்கமாகும். ‘பொம்மை’ திரைப்படத்தை பார்த்தால்தான் இலங்கைத் தமிழர்களின் வேதனை என்ன என்பதை அனைவரும் உணர முடியும். இந்தப் படம் சுவீடன் நாட்டின் லுலியா சர்வதேச திரைப்பட விழாவிலும், போடன் சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை பெற்றுள்ளது. மேலும் சினி ரோயல் சர்வதேச திரைப்பட விழாவிற்கும் தேர்வாகியுள்ளது” என்று தெரிவித்தார்.
