நடிகர் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள, இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘லீடர்’. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி படம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளரும் கதாநாயகனுமான லெஜண்ட் சரவணன், பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், உலகம் முழுவதும் போர் சூழ்நிலை நிலவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் என்றார். தனது இரண்டாவது படமான ‘லீடர்’ ஏப்ரல் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தெரிவித்தார். ஒரு தந்தை மற்றும் மகளின் பாச உறவுக்குள் ஒரு கேங்ஸ்டர் நுழைந்தபோது உருவாகும் மாற்றங்களே இப்படத்தின் கதையாகும் என்றும் கூறினார். இயக்குநர் துரை செந்தில்குமார் இந்த படத்திற்காக முழுமையான அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார் என்றும், இப்படத்தை பார்த்த இசையமைப்பாளர் ஜிப்ரான் அரை மணி நேரம் தொலைபேசியில் பாராட்டியது மறக்க முடியாத அனுபவம் என்றும் தெரிவித்தார். மேலும், இப்படத்தின் பாடல்கள் கதையோடு இணைந்து பயணிக்கும் வகையில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன என்றும் கூறினார்.
மேலும், நடிகை ஆண்ட்ரியா சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார் என்றும், ஐஸ்வர்யா லட்சுமி தனது முதிர்ச்சியான நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார் என்றும் பாராட்டினார். இப்படத்தை பார்த்த வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஆகியோர் படத்தை பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது என பாராட்டியதாகவும் கூறினார். ‘ஜெயிலர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களின் வரிசையில் ‘லீடர்’ திரைப்படமும் இடம் பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இப்படத்தில் அவருக்கு மிகவும் பிடித்த வசனம், “கடவுள் எதையும் நேரடியாக செய்ய மாட்டார்; நல்ல மனிதர்களின் மூலம் தான் செய்கிறார். அவர்களை நம்புங்கள், என்னையும் நம்புங்கள்” என்பதாகும் என்றும் கூறி, இந்த கோடை விடுமுறையை ‘லீடர்’ படத்துடன் கொண்டாடுமாறு ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.
