விஜய் நடிப்பில் வெற்றி பெற்ற ‘யூத்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமான பின்னர், நடிகராக வலம் வந்தவர் நட்டி நட்ராஜ். இவர் ‘சதுரங்க வேட்டை, கர்ணன், மகாராஜா, கம்பி கட்ன் கதை’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். சமீபகாலமாக, இவர் தொடர்ந்து ரசிகர்கள் விரும்பும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், நட்டி நட்ராஜ் தற்போது உமாபதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தங்க நட்சத்திரம்’ படத்தில் நடித்துள்ளார். இதில் எம்.எஸ் பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா, கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அரசியல் கலந்த காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் “எப்போ.. எப்போ.. திரைப்படம் எப்போ?”, “சாதி மதம் இல்லயடி பாப்பா எங்க படத்துக்கு எதிர்ப்பா?”, “அறிவியல் படத்துக்கு அரசியல் எதுற்கு?” போன்ற வித்தியாசமான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது.
