-14 டிகிரி கடும் குளிரில், கை கால்கள் உறையும் சூழ்நிலையில் ‘லீடர்’ படப்பிடிப்பு நடந்தது – லெஜண்ட் சரவணன்!

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் நடித்துள்ள திரைப்படம் ‘லீடர்’ ஆகும். இந்த படம் வரும் ஏப்ரல் 3-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளரும், கதாநாயகனுமான லெஜண்ட் சரவணன், பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். தனது உரையில் அவர் கூறுகையில், “உலகம் முழுவதும் போர் சூழ்நிலைகள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். எனது இரண்டாவது படமான ‘லீடர்’ படம் வருகிற ஏப்ரல் 3-ம் தேதி, புனித வெள்ளி நாளன்று, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது” என்று தெரிவித்தார்.

லெஜண்ட் சரவணன் மேலும் கூறுகையில், ஒரு தந்தை மற்றும் மகளின் பாச உறவுக்குள் ஒரு கேங்ஸ்டர் நுழைந்தால் ஏற்படும் மாற்றங்களே இப்படத்தின் மையக் கதையாகும் என்றார். இயக்குநர் துரை செந்தில்குமார், இந்த படத்திற்காக தனது முழு அர்ப்பணிப்பையும் செலுத்தி சிறப்பாக வடிவமைத்துள்ளார். இப்படத்தை பார்த்த இசையமைப்பாளர் ஜிப்ரான், அரை மணி நேரம் தொலைபேசியில் பேசி பாராட்டியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்றும் கூறினார். மேலும், இப்படத்தின் பாடல்கள் கதையுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் வகையில் மிகச் சிறப்பாக உருவாகியுள்ளன என்றும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஜார்ஜியா விமான நிலையத்தில் -14 டிகிரி கடும் குளிரில், கை கால்கள் உறையும் சூழ்நிலையில் 14 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் அவர் கூறினார். கிளைமாக்ஸ் காட்சியில், நூற்றுக்கணக்கான வெளிநாட்டு ஸ்டண்ட் கலைஞர்களுடன் குறுகிய ரயில் பெட்டிக்குள் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது தனது காலில் கடுமையான காயம் ஏற்பட்டாலும், ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப கலைஞர்கள் காத்திருந்ததால், ஊசி போட்டுக்கொண்டு மீண்டும் நடிக்கத் தொடங்கியதாக அவர் பகிர்ந்தார். அந்த அளவிலான ஆற்றல் எங்கிருந்து வந்தது என்பது கூட அவருக்கே புரியவில்லை என்றும் தெரிவித்தார். நடிகர் லால் ஒரு திறமையான கலைஞர் என்றும், அவருடன் நடித்தது ஒரு சவாலான அனுபவமாக இருந்தது என்றும் கூறினார். மேலும், ஷயாம் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்றும், இயக்குநர் நினைத்தபடியே ஆண்ட்ரியா மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார் என்றும் அவர் பாராட்டினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading