தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள புதிய படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே). இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
இப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன்போது வெளியான ‘டியூட்’ படத்தால் எல்.ஐ.கே படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இதற்கு பிறகு பலமுறை வெளியீடு தள்ளிப்போனதால், படம் எப்போது திரைக்கு வரப்போகிறது என்பதில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வருவதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் அறிவிப்பு ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து, படத்தில் இடம் பெற்றுள்ள மூன்றாவது பாடல் ‘அடாவடி’ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடல் ரோகேஷ், விக்னேஷ் சிவன் வரிகளில், மதிச்சியம் பாலா பாடியுள்ளார்.
