மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த அமைதிப்படை திரைப்படம் 1994ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி மறுபடியும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சத்யராஜ் பல சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அப்போது விஜய் குறித்து அவர் கூறிய சம்பவம் கவனம் ஈர்த்தது.
அவர் கூறியதாவது, “ஒரு கட்டத்தில் கதாநாயகனாக எனது பயணம் குறைந்து, கேரக்டர் ரோல்களுக்கு மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது நான் நடித்த பல படங்களும் தொடர்ச்சியாக தோல்வியடைந்தன. அந்த காலகட்டத்தில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகியோர் முன்னேறி வந்த காலம் அது. அப்போது விஜய் அளித்த ஒரு பேட்டியில், ‘உங்களுக்கு நடிப்பில் யார் முன்மாதிரி?’ என்று கேட்கப்பட்டபோது, ‘எனக்கு யாரும் முன்மாதிரி இல்லை’ என்று பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து, ‘எந்த வகையான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டபோது, ‘அமைதிப்படை படத்தில் சத்யராஜ் நடித்தது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை’ என்று கூறினார். அந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. உடனே அவருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்தேன். வளர்ந்து வரும் ஒரு நடிகர் நம்மைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுவது மிகப் பெரிய விஷயம்,” என்று நினைவுகூர்ந்தார்.
