மலையாளத் திரைப்பட உலகில் நடிகர் நிவின் பாலி நடித்துள்ள ‘பிரதிச்சாயா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அரசியல் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்குநர் பி. உன்னிகிருஷ்ணன் இயக்கியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நிவின் பாலி, திரைப்படத் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கட்டாய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: “நட்சத்திர நடிகர்களாக இருந்தாலும் சரி, தொழில்நுட்ப கலைஞர்களாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் வாரத்தில் குறைந்தது ஒரு நாள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். அதற்காக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கட்டாயமாக இருக்க வேண்டும்,” என்று அவர் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.
திரைப்படத் துறையில் நடைமுறையாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ற கருத்து இருந்தாலும், பல படங்களின் படப்பிடிப்புகள் அந்த நாளிலும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக அந்த நாளில் இரட்டிப்பு சம்பளம் வழங்கப்படுவதால், பலரும் அந்த விடுமுறையைப் பயன்படுத்தாமல் பணியில் ஈடுபடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
