தமிழ் திரையுலகில் ‘இதுதாண்டா போலீஸ் ராஜசேகர்’ என்ற புகழை பெற்றவர் தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர். இயக்குநர் பாரதிராஜா அவர்களால் ‘புதுமைப் பெண்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், பின்னர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக உயர்ந்து, 2023ஆம் ஆண்டு வரை கதாநாயகனாகவே தொடர்ந்து நடித்தார். அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளாக அவர் எந்த திரைப்படத்திலும் நடித்திருக்கவில்லை. இதனால், அவரை கதாநாயகனாக வைத்து படங்களை உருவாக்க இயக்குநர்கள் சிலர் தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, முக்கியத்துவம் வாய்ந்த குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தயாராக இருந்தபோது, இயக்குநர் அபிலாஷ் ரெட்டி ‘பைக்கர்’ திரைப்படத்தின் கதையை அவரிடம் கூறியுள்ளார். அந்த படத்தில் கதாநாயகனாக சர்வானந்த் நடித்துள்ள நிலையில், அவரது தந்தையாகவும் மிகுந்த முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரத்தில் ராஜசேகர் நடித்துள்ளார். இனி தொடர்ந்து குணசித்திர வேடங்களில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றம் குறித்து ராஜசேகர் கூறுகையில், “இந்த படத்தில் நடிக்கும்போது சர்வானந்த் திரைப்படத்தில் இரண்டாவது நாயகனாக நடிக்கிறேனா என்ற எண்ணம் முதலில் ஏற்பட்டது. ஆனால் என் மனைவியும் குழந்தைகளும் அது முக்கியமான கதாபாத்திரம் என்று என்னை உற்சாகப்படுத்தினர். சமீபத்தில் ஒரு திரையரங்கிற்கு சென்றபோது, அங்கு இருந்தவர்கள் நான் எந்த படத்தில் நடிக்கிறேன் என்று கேட்டனர். ‘பைக்கர்’ என்று கூறியதும், ‘அது சர்வானந்த் படம் தானே?’ என்று அவர்கள் கேட்டனர். அப்போது தான், அது அவருடைய படம் என்றாலும், நான் அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என்பதை தெளிவாக உணர்ந்தேன்.அந்த அனுபவம் எனது திரைபயணத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தை உருவாக்கியது. இனி இயக்குநர்கள் முக்கியமான கதாபாத்திரங்களை எழுதும்போது என்னை நினைவில் கொண்டு கதைகளை உருவாக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
