பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தெலுங்கானா அரசின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளார். தெலுங்கானா அரசு வழங்கும் முக்கியமான திரைப்பட விருதுகளில் ஒன்றான ‘கடார்’ விருதுகளுக்கான 2025ஆம் ஆண்டுக்கான பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தெலுங்கு திரைப்படத் துறையில் சாதனை படைத்த நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பலருக்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
‘தெலுங்கான கடார் திரைப்பட விருதுகள் 2025’ விழா ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ‘தி கேர்ள் பிரெண்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக ராஷ்மிகா மந்தனாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பேசிய ராஷ்மிகா, “ஒரு காலத்தில் என்னுடைய நடிப்பை பலர் கிண்டல் செய்தார்கள். ஆனால் இப்போது அதே நடிப்புக்காக விருது கிடைத்துள்ளது. இது மிகப்பெரிய பயணத்தை கடந்து வந்த உணர்வை தருகிறது. ‘தி கேர்ள் பிரெண்ட்’ போன்ற திரைப்படத்திற்காக விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியானது. ஏனெனில் இத்தகைய கதைகளுடன் மேலும் பல படங்கள் உருவாக இது ஊக்கமளிக்கும். இந்த வாய்ப்பை வழங்கிய ராகுலுக்கு நன்றி. நான் இங்கு மருமகளாக வருவதற்கு முன் மகளாக வந்தேன். அப்போது நீங்கள் அளித்த அன்பு மறக்க முடியாதது. இப்போது மருமகளாக உங்கள் முன் நிற்பது பெருமையாக உள்ளது. உங்கள் அன்புக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
