தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகராக விளங்கும் துல்கர் சல்மான், தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்த கடைசித் திரைப்படமான ‘காந்தா’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, மலையாளத்தில் ‘ஐயம் கேம்’ எனும் திரைப்படத்திலும், இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் உருவாகும் நேரடி தெலுங்கு திரைப்படமான ‘ஆகாசம்லோ ஒக தாரா’ படத்திலும் அவர் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, துல்கர் சல்மான் தனது 41வது திரைப்படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர் ரவி நெலகுதிதி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துவருகிறார். இந்தத் திரைப்படத்திற்கும் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தின் ஓடிடி ஒளிபரப்பு உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியீடு செய்யப்பட்ட பின்னர், இந்தப் படம் அந்நிறுவனத்தின் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
