‘ஜெயிலர்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் இணையும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருவதுடன், இசையை அனிருத் அமைக்கிறார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர். மேலும், எஸ்.ஜே. சூர்யா, விஜய் சேதுபதி, இந்தி நடிகை வித்யா பாலன், சிறப்பு தோற்றத்தில் ஷாருக்கான் ஆகியோரும் நடிக்கின்றனர் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, நடிகை நோரா பதேஹி ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், முதல் பாகத்தில் நடித்த மிர்னா மேனனும் இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், இந்தப் படம் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், ‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, மற்றொரு படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு பேட்டியில் ‘ஜெயிலர் 2’படம் எப்படி உருவாகி வருகிறது என்று கேட்டபோது, இடைவேளை காட்சியை இப்போது தான் படமாக்கி முடித்தோம். தமிழ் திரையுலகில் இதுபோன்ற இடைவேளை காட்சி இதற்கு முன் வந்ததில்லை, இனியும் வருமா என்று தெரியவில்லை என கூறினேன். ஆனால் ‘ஜெயிலர் 2’ குறித்து சொல்ல வேண்டுமானால், முதல் பாகத்தின் இடைவேளை காட்சி அப்படியிருந்தால், இந்தப் பகுதி எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை நீங்கள் யூகிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தொடர்ந்து, நான் 25 ஆண்டுகளுக்கு முன்பு ‘படையப்பா’ திரைப்படத்தை பார்த்தேன். அதில் ரம்யா கிருஷ்ணன், ரஜினி அவர்களைப் பார்த்து வயதாகினாலும் அழகும் நடையும் உங்களை விட்டு போகவில்லை என்று கூறும் வசனம் நினைவுக்கு வருகிறது. இப்போது அவரை நேரில் பார்க்கும்போதும் அதே உணர்வே வருகிறது. அதே உற்சாகத்துடனும் நடையுடனும் அவர் இருக்கிறார். அதையும் தாண்டி அவர் ஒரு நல்ல மனிதர், அவரிடம் பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்என கூறியுள்ளார்.
