தெலுங்கு திரைப்படத் துறையைச் சேர்ந்த கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் தெலங்கானா அரசு வழங்கி வரும் கட்டார் சினிமா விருதுகள் வழங்கும் விழா ஐதராபாத் நகரில் சிறப்பாக நடைபெற்றது. அந்த நிகழ்வில் 2025ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டதுடன், திரைத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகள் புரிந்தவர்களுக்கும் சிறப்பு விருதுகள் அளிக்கப்பட்டன.
இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு பைடி ஜெய்ராஜ் சினிமா விருது வழங்கப்பட்டது. அந்த விருதை பெற்றுக்கொண்ட அவர் தனது உரையில், “இனி கோலிவுட், டோலிவுட், பாலிவுட், சாண்டல்வுட் என்று பிரித்துப் பேசும் காலம் இல்லை. எல்லாவற்றையும் இணைக்கும் ஒரு பெயர் மட்டுமே உள்ளது; அது இந்திய சினிமா” என்று கூறினார்.
மேலும், அவர் தனது சமூக வலைத்தளப் பதிவில் விருது பெற்ற புகைப்படங்களை பகிர்ந்து, “தெலங்கானா கட்டார் விருதுகளை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்ததற்காக முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் துணை முதலமைச்சர் மல்லு பட்டி விக்ரமார்கா ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பைடி ஜெய்ராஜ் சினிமா விருதை மிகுந்த பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். இந்த விருது வழங்கும் முறையை மீண்டும் உயிர்ப்பித்ததன் மூலம் நீங்கள் ஒரு விருதை மட்டுமல்லாது கலைத்துறையின் துணிச்சலையும், கலாச்சார மரபையும், மக்களின் குரலையும் மீண்டும் மதிப்பளிக்கும் பணியை செய்துள்ளீர்கள். விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் மற்றும் இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த குழுவினருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விழாவில் தெலுங்கு திரைப்படத் துறையைச் சேர்ந்த பல முன்னணி கலைஞர்களும் கலந்து கொண்டனர்.
