‘லிப் சிங்கிங்’-ஐ சார்ந்திருக்க வேண்டிய சூழல் வந்தால் பாடுவதையே நிறுத்திவிடுவேன் -பாடகி ஸ்ரேயா கோஷல்!

இந்தியாவின் பல மொழிகளில் தனது இனிமையான குரலால் ரசிகர்களை ஈர்த்துள்ள பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல், சமீபத்தில் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தனது இசைப் பயணத்தைப் பற்றி வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில், பின்னணிப் பாடகராக இருப்பதைவிட மேடையில் நேரடியாகப் பாடுவதிலேயே அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். ஒரு நேரடி மேடை நிகழ்ச்சியில் அதன் இயல்பான தன்மை மாறாமல் இருப்பதே முக்கியம் என்றும், அப்படியிருக்கும்போதுதான் அந்த கலைஞர் மேடையில் முழுமையாக வெளிப்பட முடியும் என்றும் கூறியுள்ளார்.

மேடையில் பாடும் போது, முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட பாடலுக்கு ஏற்ப உதடுகளை மட்டும் அசைக்கும் முறையை தாம் ஒருபோதும் விரும்புவதில்லை என்றும், அது தமக்கு மிகவும் அசௌகரியமாக உணரப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார். ஒருவேளை அத்தகைய சூழ்நிலையில் தம்மால் செயல்பட வேண்டியதாக இருந்தால், அன்றே பாடலை நிறுத்திவிடுவேன் என்றளவுக்கு அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். தன் குரல் வலிமை இருக்கும் வரை தொடர்ந்து இசைப் பயிற்சியில் ஈடுபட்டு, மேடையில் நின்று ரசிகர்களுக்காக நேரடியாகப் பாடுவதே தன் விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், அரிஜித் சிங் இசையிலிருந்து ஓரளவு இடைவேளை எடுத்துக்கொண்டது மிகவும் துணிச்சலான முடிவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமக்கும் சில நேரங்களில் இசையிலிருந்து சிறிய இடைவேளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும், அதுபோன்ற முடிவை எடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அரிஜித் சிங் இசையுடன் ஆழமான தொடர்பு கொண்டவர் என்றும், அவர் உண்மையான மனதுடன் இசையை நேசிப்பவர் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

அவரைப் பொறுத்தவரை, இசை என்பது மற்ற அனைத்தையும் விட உயர்ந்த ஒன்று என்பதாலும், அதற்காகவே மக்கள் அவரை அதிகமாக நேசிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். பல வெற்றிப் பாடல்களின் மூலம் இந்தி திரையுலகில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள அரிஜித் சிங், தனது நேர்மையான அணுகுமுறையால் ரசிகர்களுடன் ஆழமான உறவை உருவாக்கியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கலைஞர்களாக நாம் எதிர்கொள்ளும் தனிப்பட்ட சிக்கல்களை மேடையில் வெளிப்படுத்தக் கூடாது என்றும், மக்கள் இசையை ரசிக்கவும் மனஅழுத்தத்திலிருந்து விடுபடவும் வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கும் அன்பே தன்னை தொடர்ந்து மேடையில் பாடத் தூண்டுகிறது என்றும், மனம் மகிழ்ச்சியாக இருந்தால் ஆற்றல் இயல்பாகவே உருவாகும் என்றும் ஸ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading