கன்னடத் திரைப்பட உலகில் நடிகர் துருவ் சார்ஜா கதாநாயகனாகவும், இயக்குநர் பிரேம் இயக்கத்திலும் உருவாகியுள்ள ‘கேடி : தி டெவில்’ திரைப்படம் பான் இந்தியா அளவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இவருடன் பாலிவுட் நடிகை நோரா பதேகி இணைந்து ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார்.
கன்னடத்தில் படமாக்கப்பட்ட இந்தப் பாடலின் இந்தி பதிப்பில் ஆபாசமான வரிகள் அதிகமாக இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததால், மகளிர் உரிமை ஆணையம் உள்ளிட்ட பல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதன் காரணமாக மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் வலியுறுத்தலின்படி அந்த பாடல் அனைத்து தளங்களிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பாடலில் நடித்திருந்த நோரா பதேகி, இந்தி பதிப்பில் இடம்பெற்ற ஆபாச வரிகள் காரணமாக இயக்குநர் பிரேம் மீது கடும் அதிருப்தி கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்தப் படத்தில் சஞ்சய் தத் நடித்திருக்கிறார் என்பதற்காகவே நான் இந்தப் பாடலில் நடிக்க ஒப்புக்கொண்டேன். கன்னடத்தில் இந்தப் பாடலின் வரிகள் குறித்து இயக்குநர் விளக்கியபோது எனக்கு முழுமையாக புரியவில்லை. ஆனால் இந்தி வெளியீட்டு விழாவில் தான் பாடலின் வரிகள் மிகுந்த மோசமானவையாக இருப்பதை உணர்ந்தேன். அந்த நேரத்தில் இந்தப் பாடல் நமக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவரிடம் தெரிவித்தேன்.
மேலும், என் மதிப்பை பாதுகாக்கும் நோக்கில் இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் இருந்து விலகியே இருந்தேன். தற்போது பலரின் எதிர்ப்பால் இந்தப் பாடல் நீக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை வெளியிடுவது குறித்து என்னிடம் முன்பாக அனுமதி கேட்கப்படவில்லை. அதோடு, தேவையின்றி என்னையும் சஞ்சய் தத்தையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட படங்களை பயன்படுத்தி லிரிக்கல் வீடியோ வெளியிட்டுள்ளனர். இது என் தொழில் மரியாதையை பாதிக்கும் விதமாக உள்ளது” என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
