இந்தி திரைப்பட உலகில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கிங்’ திரைப்படத்தில் ஷாருக் கான் தற்போது நடித்துவருகிறார். இந்த திரைப்படத்தில் அவருடன் தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷெராப், ராணி முகர்ஜி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ஷாருக் கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
சுமார் 350 கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை வரும் டிசம்பர் மாதம் 24ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பல இயக்குநர்களிடம் கதைகள் கேட்டுவந்த ஷாருக் கான், அடுத்ததாக ஒரு காதல் கதையை மையமாகக் கொண்ட திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார் என இந்தி திரையுலகில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரிய செலவில் உருவாகவுள்ள இந்த திரைப்படம் முதிர்ந்த காதலை மையமாகக் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. சமீப காலமாக அதிரடி கதைகளில் அதிகமாக நடித்துவரும் ஷாருக் கானை, இந்த காதல் கதை மிகவும் கவர்ந்ததால் அதில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இளம் தோற்றத்திற்கு மாறாமல் தனது வயதிற்கு ஏற்ற தோற்றத்திலேயே அவர் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை 2027ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் தொடங்க திட்டமிட்டுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
