தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கும் ஜி.வி. பிரகாஷ் குமார், தொடர்ந்து பல மொழிகளில் உருவாகும் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருவதுடன், நடிகராகவும் வலம் வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘பிளாக்மெயில்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்தை மு.மாறன் இயக்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜி.வி. பிரகாஷ் தற்போது ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநராக இருந்த மரியா இளஞ்செழியன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ கெளரி பிரியா நடித்துள்ளார். மேலும் அப்பாஸ், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நகைச்சுவை மற்றும் காதல் கலந்த கதைக்களத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் இளைஞர்களை கவரும் வகையில் உருவாகி வருகிறது. இதன் முதல் பாடலாக வெளியான “ஆடினே இருப்பேன்” பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தின் டிரெய்லரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். இந்த திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
