தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி ‘முத்து என்கிற காட்டான்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடரை மணிகண்டன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் ‘காக்கா முட்டை’ மற்றும் ‘கடைசி விவாசாயி’ போன்ற மிகச்சிறந்த படைப்பை உருவாக்கிய இயக்குநர் ஆவார்.
விஜய் சேதுபதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலம் இதைத் தயாரித்துள்ளார். இத்தொடரில் விஜய் சேதுபதி, இர்ஷாத் அலி, பாலிவுட் நடிகர் மிலிண்ட் சோமன், சிங்கம் புலி, வேட்டை முத்துக்குமார், ரிஷா ஜேக்கப்ஸ், விஜே பாரு ஆகியோரும் நடித்துள்ளனர்.சமீபத்தில் ‘முத்து என்கிற காட்டான்’ வெப்தொடரின் டீசர் வெளியானது. முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையை மையமாகக் கொண்ட டீசர் ரசிகர்களிடம் ஆர்வத்தைத் தூண்டிய நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் மேலும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. குறிப்பாக முத்து என்பவன் பயமுறுத்தும் குற்றவாளியா ? அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட வீரனா? என பல்வேறு கோணங்களில் காட்டப்படும் டிரெய்லர் வெப்சீரிஸின் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.
டிரெய்லர் குறித்து விஜய் சேதுபதி கூறியதாவது, “மணிகண்டன் முதன்முதலில் காட்டான் கதையை எனக்கு சொன்னபோது, ஆறு பக்கங்களைக் கொண்ட ஒரு சுருக்கக் குறிப்பை பகிர்ந்தார். அவர் கற்பனை செய்த கதாபாத்திரமும் அதன் உலகமும் என்னை உடனே ஈர்த்துவிட்டது. இந்தத் தொடரில் பணியாற்றிய அனுபவம், ஒரு நடிகராக எனக்கு உண்மையான மனநிறைவை அளித்தது. இதைப் பார்ப்போர் அனைவரும் இதன்மூலம் சிந்திக்கத் தூண்டும் ஏதாவது அர்த்தமுள்ள ஒன்றை எடுத்துச் செல்வார்கள் என்று நான் மனமார நம்புகிறேன் என்றுள்ளார்.
