இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நடிகர் ரஜினிகாந்த் நடித்த இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனையை படைத்தது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘ஜெயிலர் 2’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.
இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகி பாபு, சிவராஜ் குமார், மோகன்லால், எஸ்ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாலிவுட் கிங் நடிகரான ஷாருக்கான் கேமியோ தோற்றத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் முதல் பாகத்தில் ரஜினிகாந்த் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தன. அந்த கூட்டணி இந்த இரண்டாம் பாகத்திலும் மீண்டும் இடம்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் யோகி பாபு கூறியதாவது: “முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்தில் எனது கதாபாத்திரத்தை இயக்குநர் நெல்சன் வித்தியாசமாக வடிவமைத்துள்ளார். படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் என்னிடம் வந்து, ‘யோகி, என்னைப் பாருங்கள்… எல்லாம் சரியாக இருக்கிறதா? ஜெயிலர் படத்தில் இருந்தது போலவே என்னுடைய கெட்டப் இருக்கிறதா?’ என்று கேட்டார். இப்போது கூட அவர் தனது முதல் படத்தில் நடிப்பது போல் மிகுந்த அர்ப்பணிப்புடன் தனது வேலையை செய்து வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
