தன்னைப் பற்றி மற்றவர்கள் எப்போதும் பெருமையாக பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அபர்ணதி. அவர் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று அனைவரின் பாராட்டையும் பெறுகிறார். ஆனால் அந்த பாராட்டுகள் சில காலம் தான் என்பதை உணர்கிறார். தொடர்ந்து புகழைப் பெற வேண்டும் என்ற ஆசையில் அவர் சில முக்கியமான முடிவுகளை எடுக்கத் தொடங்குகிறார்.
ஒரு கட்டத்தில் உயர்கல்வி பயின்று ஒருவழியாக அபர்ணதி மாவட்ட கலெக்டராக உயர்ந்த பதவியில் அமருகிறார். அந்த நேரத்தில் மாநிலத்தின் முதல்-அமைச்சராக இருக்கும் இளவரசு மூலம் அவருக்கு சில தடைகள் உருவாகின்றன. ஆனால் அந்த தடைகளை தன்னம்பிக்கையுடன் முறியடித்து முன்னேறும் அபர்ணதி, ஒருகட்டத்தில் முதல்-அமைச்சரே தனது பேச்சை கேட்கும் நிலையை உருவாக்குகிறார். அவரது இந்த அதிவேக வளர்ச்சியை தடுக்க ஒரு குழு முயற்சி செய்கிறது. அதற்காக பல்வேறு தடைகளையும் உருவாக்குகிறது. அந்த சவால்களை அனைத்தையும் அபர்ணதி எதிர்கொண்டு வெற்றி பெறுகிறாரா? அவர் நினைத்த இலக்கை அடைகிறாரா? என்பதே இந்த திரைப்படத்தின் விறுவிறுப்பான மீதிக் கதை.
இந்த திரைப்படத்தில் துணிச்சலான கதாபாத்திரத்தில் அபர்ணதி மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரமே இந்தப் படத்தின் முக்கிய தூணாக அமைந்துள்ளது. அவரது பேச்சும் பார்வையும் மிகவும் கூர்மையாக உள்ளது. அவரது நடிப்பில் தமிழகத்தின் முக்கிய பெண் அரசியல் தலைவரின் சாயலும் தென்படுகிறது.
இந்தப் படத்தில் முதலமைச்சராக நடித்துள்ள இளவரசு, மத்திய அமைச்சராக நடித்துள்ள ஜான் விஜய், அபர்ணதியின் தந்தையாக நடித்துள்ள காளி வெங்கட், எதிர்க்கட்சித் தலைவராக நடித்துள்ள லிவிங்ஸ்டன், முன்னாள் முதலமைச்சராக நடித்துள்ள ஒய்.ஜி. மகேந்திரன், அமைச்சராக நடித்துள்ள சரவண சுப்பையா ஆகியோர் தங்களுக்குக் கிடைத்த கதாபாத்திரங்களை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.மேலும் டி.எம். கார்த்தி, சுரேஷ் சக்கரவர்த்தி, நோபல் கே. ஜேம்ஸ், சச்சு, மங்கல், சாய் தன்யா, ரேகா நாயர், சிறுமி சம்யுக்தா ஆகியோரின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது.
எம்.எஸ். பிரபுவின் ஒளிப்பதிவு மற்றும் கார்த்திக் ராஜாவின் இசை இந்த திரைப்படத்திற்கு வலு சேர்க்கின்றன. அரசியல் பின்னணியில் அமைந்துள்ள காட்சிகள் படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்துகின்றன. சில காட்சிகளில் இன்னும் தெளிவாக காட்சிப்படுத்தியிருக்கலாம் என்ற உணர்வு வருகிறது. சில காட்சிகளை தவிர்த்து இருக்கலாம் என்ற எண்ணம் வந்தாலும் ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து கதையை சொல்லும் இயக்குநர் ராகுல் அசோக் அதனை அரசியல் கள நகர்வுகளுடன் இணைத்து மிகவும் சுவாரஸ்யமாக கையாண்டுள்ளார்.
