ஒரு டேட்டிங் செயலியை உருவாக்க முயற்சி செய்து போராடி வரும் ஹீரோ சுதர்சன் கோவிந்த் கதாபாத்திரமாக வருகிறார். அதேசமயம், விரைவில் இயக்குநராக வேண்டும் என்ற இலக்குடன் முயற்சி செய்து வரும் ஹீரோயின் அர்ச்சனா ரவி கதையில் இடம் பெறுகிறார். “உங்களுக்கு காதல் அனுபவம் இருந்தால்தான் உங்கள் பணிகளை மேலும் சிறப்பாக செய்ய முடியும்” என்ற அழுத்தம் உருவாகும் நிலையில், இருவரும் தங்கள் தொழிலும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு காதலிப்பது போல நடிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால், அந்த நடிப்பு காதல் ஒரு கட்டத்தில் உண்மையான உணர்வாக மாறுகிறது. அதே நேரத்தில், அவர்கள் ஒருவருக்கொருவர் ‘சுயநல நோக்கத்திற்காக’ காதலித்தோம் என்பதை உணரும்போது என்ன நிகழ்கிறது என்பதே நீ பார்எவர் திரைப்படத்தின் மையக் கதை.
வழக்கமான காதல் கதை போன்று இல்லாமல், இன்றைய காலகட்டத்தில் காதலின் நிலை, காதலர்களின் மனநிலை, தொழில்நுட்பத்தின் தாக்கம் ஆகியவற்றை சிறிது சென்டிமென்ட் கலந்து புதிய கோணத்தில் சொல்ல முயற்சித்துள்ளார் புதுமுக இயக்குநர் அசோக் குமார் கலைவாணி. ஹீரோவாக நடித்துள்ள சுதர்சன் கோவிந்த் பெரும்பாலான காட்சிகளில் சோக உணர்வோடு தோன்றுகிறார். சில குறிப்பிட்ட தருணங்களிலும் பாடல் காட்சிகளிலும் மட்டும் அவர் புத்துணர்ச்சியுடன் தெரிகிறார். இதனால் சில இடங்களில் படம் சற்றே மெதுவாக உணரப்பட்டாலும், நடிப்பில் அவர் தன்னை நிரூபித்துள்ளார்.
இயக்குநராக வர விரும்பும் கதாபாத்திரத்தில் அர்ச்சனா ரவி நடித்திருப்பது படத்தின் முக்கிய பலமாக அமைகிறது. அவரது நடிப்பு, உடைத் தேர்வு, நடனம் உள்ளிட்ட அனைத்தும் ரசிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக பொள்ளாச்சி பகுதிகளில் இடம்பெறும் காட்சிகளில் அவர் சிறப்பாக கவர்கிறார். இருப்பினும், அவருக்கான சிறுவயது ஃப்ளாஷ்பேக் மற்றும் பின்னணி காட்சிகளில் சினிமாத்தன்மை அதிகமாக உணரப்படுகிறது. அவரது தோழியாக வரும் சினேகா சக்தி துள்ளலான கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார். ஹீரோவின் நண்பராக வரும் விஜே பப்பு தனது சின்னச் சின்ன நடிப்புகளால் சிரிப்பை ஏற்படுத்துகிறார்.
காதலர்கள் சந்திக்கும் தருணங்கள், சண்டைகள், பிரிவு போன்ற அம்சங்கள் இயல்பாக அமைந்திருந்தாலும், கிளைமாக்ஸ் வழக்கமான பாணியிலேயே உள்ளது. ஹீரோவின் தாத்தாவாகவும், காதலை எதிர்க்கும் நபராகவும் ஒய்.ஜி. மகேந்திரன் நடித்துள்ளார். ஆனால், அந்த கதாபாத்திரத்தில் அவரது நடிப்பில் சிறிது செயற்கைத்தன்மை காணப்படுகிறது. அதை மேலும் இயல்பாக வடிவமைத்திருக்கலாம். ஹீரோவின் அம்மாவாக வரும் வித்யா இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். பாடகர் ஸ்ரீராம் நடித்துள்ள பகுதி வித்தியாசமாக அமைந்துள்ளது. மேலும், சிறிய கௌரவ வேடத்தில் வந்தாலும் நிழல்கள் ரவி தனது நடிப்பால் தனித்தன்மையை வெளிப்படுத்துகிறார்.
இந்த காதல் கதைக்கு அஷ்வின் இசை மற்றும் பாடல்கள் ஓரளவு ஆதரவாக அமைந்துள்ளன. சில பாடல் வரிகள் உணர்ச்சியை நன்றாக வெளிப்படுத்துகின்றன. காதல், சண்டை, பிரிவு, மீண்டும் இணைவு போன்ற அம்சங்கள் பல திரைப்படங்களில் பார்த்த பாணியில் இருந்தாலும், டேட்டிங் செயலி குறித்த கருத்தை இன்னும் தெளிவாகவும் இளமையாகவும் சொல்லியிருக்கலாம். மொத்தத்தில், காதல் கதையுடன் கிளைக் கதைகளையும், சில கருத்துகளையும் இணைத்து, இறுதியில் அனைத்தையும் இணைக்கும் திரைக்கதை ஒரு அளவிற்கு பொருத்தமாக அமைந்துள்ளது.
