இந்திய ராணுவத்தில் பணியாற்றும் உற்சாகமான இளைஞரான ரன்வீர் சிங், உள்ளூர் எம்எல்ஏவின் அட்டூழியங்களால் தனது குடும்பத்தில் பல இழப்புகளை எதிர்கொள்கிறார். அந்த வேதனையால் பழிவாங்கும் நோக்கில் ஏ.கே.47 துப்பாக்கியை எடுத்துக்கொண்டு எம்எல்ஏவின் ஆட்களை கொன்று குவிக்கிறார். இதனால் சட்டரீதியான தண்டனை அவரை எதிர்கொள்ளும் நிலையில், ஒரு குழு அவரை கடத்திச் செல்கிறது. “உன் கோபத்தையும் வீரத்தையும் தேசப்பற்றுக்காக பயன்படுத்தி, தீவிரவாதிகளை அழித்துவிடு” என்று கூறி, இந்திய உளவுத்துறை அவரை உளவாளியாக மாற்றி, பாகிஸ்தானுக்குள் ‘ஹம்ஸா’ என்ற பெயரில் அனுப்புகிறது. அங்கு மெதுவாக உயர்ந்து, பல அதிரடி நடவடிக்கைகள் மூலம் கராச்சி அருகிலுள்ள லியாரி பகுதியில் டானாக மாறுகிறார் ரன்வீர் சிங். பின்னர், பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் தீவிரவாத அமைப்புகளும் நம்பும் பெரிய ஆயுத வியாபாரியாக உருவெடுக்கிறார்.
இதனுடன், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களையும் அரசியல்வாதிகளையும் ரகசியமாக கொன்று குவிக்கிறார். தொடர்ந்து பலர் கொல்லப்படுவதால், ரன்வீர் மீது பாகிஸ்தானின் உயர்மட்ட தலைவர்களுக்கு சந்தேகம் எழுகிறது. பாகிஸ்தானின் பிடியில் இருந்த உளவாளியான ரன்வீர் சிங் சிக்கினாரா அல்லது தப்பித்தாரா? அவருக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை முழுமையாக நிறைவேற்றினாரா? என்பதே ஆதித்யா தரின் ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படத்தின் மையக் கருத்தாக அமைகிறது. முதல் பாகத்தை பார்த்தவர்களுக்கு இரண்டாம் பாகம் குறித்து ஓரளவு புரிதல் இருக்கும். உலகளவில் முதல் பாகம் ஆயிரத்து 300 கோடிக்கும் மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டாம் பாகமும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் உளவாளிகளை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வந்திருந்தாலும், ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ அவற்றிலிருந்து மாறுபட்டதாக திகழ்கிறது. காரணம், இந்த கதாநாயகனின் தேசப்பற்று மற்றும் தீவிரமான கோபம். அந்த கேரக்டருக்கு ரன்வீர் சிங் முழுமையாக பொருந்தியுள்ளார். பஞ்சாபில் ராணுவ குடும்பத்தில் வளர்ந்த அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்கள், கோபத்தின் உச்சத்தில் துப்பாக்கி ஏந்தி எதிரிகளை கொன்று குவிக்கும் தருணங்களிலிருந்து அவரது அதிரடி தொடங்குகிறது. “என் தங்கை எங்கே?” என்று கேட்டு ஒவ்வொருவரையும் கொடூரமாக பழிவாங்கும் காட்சி தனித்த திரைப்படம் பார்த்த அனுபவத்தை தருகிறது. பின்னர் பாகிஸ்தானுக்குள் சென்று ஹம்ஸா என்ற பெயரில் மாறி, தனது தோற்றத்தையும் நடைமுறையையும் மாற்றி ஆட்சி செய்வது இப்படத்தின் முக்கிய அம்சமாகிறது.
முதலில் எளிமையான இளைஞன், பின்னர் அன்பான அண்ணன், அதன் பின் பாகிஸ்தான் தாதா, அதன்பிறகு சக்திவாய்ந்த ஆயுத வியாபாரி, அன்பான கணவன், உளவுத்துறையின் நம்பகமான வீரர் என பல்வேறு பரிணாமங்களில் அவர் திகழ்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளிலும் கிளைமாக்ஸிலும் அவர் வெளிப்படுத்தும் ஆற்றல் சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு சண்டைக் காட்சியும், பழிவாங்கும் தருணங்களும் தீவிரமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவரது கோபமும் அதிரடியும் இந்தப் படத்தின் முக்கிய பலமாக திகழ்கின்றன. இந்திய அளவில் பாராட்டப்படும் அளவிற்கு அவர் நடித்திருப்பார் என தோன்றுகிறது. அதேபோல், வில்லனாக பாகிஸ்தான் தளபதியாக வரும் அர்ஜூன் ராம்பாலும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். அவரின் தோற்றமும், முக்கிய சண்டைக் காட்சிகளும் கவனிக்கத்தக்கவை.
இதில், பாகிஸ்தான் காவல்துறை அதிகாரியாக வரும் சஞ்சய் தத் இயல்பான நடிப்பில் மிளிர்கிறார். பல ஹிந்தி படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த ராகேஷ், இதில் பாகிஸ்தான் அரசியல்வாதியாக தோன்றி வித்தியாசமான நடிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் அவர் பேசும் வசனங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. ஆக்ஷன் படம் என்பதால் கதாநாயகி சாரா அர்ஜூனுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்றாலும், சில காட்சிகளில் தன் இருப்பை உணர்த்துகிறார்.
இந்தப் படத்தின் மைய சக்தி இந்திய உளவுத்துறை மற்றும் அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளாகும். உளவுத்துறை தலைவராக வரும் மாதவன், முற்றிலும் மாறுபட்ட தோற்றத்திலும் நடிப்பிலும் பார்வையாளர்களை கவர்கிறார். அவரது காட்சிகள், அவர் வழங்கும் கட்டளைகள், கிளைமாக்ஸில் தொலைபேசியில் பேசும் தருணங்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளன. அவரது கதாபாத்திரம் இந்தியாவின் புகழ்பெற்ற உளவுத்துறை அதிகாரி அஜித் தோவலின் தாக்கத்தை நினைவுபடுத்துகிறது. அதேபோல் தாவூத் இப்ராஹிம் போன்ற கேரக்டர் வடிவமைப்பும் கவனிக்கத்தக்கதாக உள்ளது.
நடிப்பைத் தவிர, இப்படத்தின் மற்றொரு முக்கிய பலம் அதன் ஆக்ஷன் காட்சிகளே ஆகும். மிகவும் தீவிரமாகவும் உணர்ச்சியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சண்டைக் காட்சிகள் பார்வையாளர்களை ஈர்க்கின்றன. கிளைமாக்ஸ் சண்டை மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வன்முறை அதிகமாக இருந்தாலும், தேசப்பற்று மையமாக இருப்பதால் அதை ரசிகர்கள் ரசிக்கத் தகுந்த மனநிலையை உருவாக்குகிறது. ஒவ்வொரு தீவிரவாதியும் அழிக்கப்படும் தருணங்களில் ஒரு வெற்றிக் களிப்பு உணர்வு உருவாகிறது.
படத்தின் பெரும்பகுதி பாகிஸ்தானில் நடப்பதாக காட்டப்பட்டாலும், அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாததால் செட் அமைப்புகள் மூலம் உண்மை உணர்வை உருவாக்கியுள்ளனர். மேலும், இந்திய அரசியல் சம்பவங்களும் கதையுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு முக்கிய காட்சியில் இந்திய பிரதமராக மோடி பதவியேற்கும் தருணம் காட்டப்படுகிறது. இந்தியாவில் பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட சம்பவத்தை கதையுடன் இணைத்து, தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சியாக சித்தரித்திருப்பது கவனிக்கத்தக்கது. இந்திய ராணுவத்தைப் புகழும் பல காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
மொத்தத்தில், இந்த படம் பார்வையாளர்களை கைதட்டவும், உற்சாகமாக கத்தவும் தூண்டும் பல தருணங்களை கொண்டுள்ளது. ராணுவத்தின் பெருமை, உளவாளிகளின் தியாகம், தேசப்பற்று, தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் போன்ற அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாதவன் மற்றும் ரன்வீர் சிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒளிப்பதிவு, இசை, ஆக்ஷன் வடிவமைப்பு, எடிட்டிங் ஆகியவை படத்தின் தூண்களாக திகழ்கின்றன.
படத்தின் நீளம் சுமார் நான்கு மணி நேரத்திற்கு அருகில் உள்ளது. சில இடங்களில் மந்தம், அதிக வன்முறை, சில அரசியல் நோக்கங்கள் போன்ற குறைகள் இருந்தாலும், ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ இந்திய சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பெறும் வகையில் உருவாகியுள்ளது. பார்வையாளர்களில் மறைமுகமாக தேசப்பற்றை தூண்டும் ஒரு திரைப்படமாக இது அமைந்துள்ளது.
