காதல் திருமணம் செய்து கொண்ட சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் தேவதர்ஷினி தம்பதியரின் ஒரே மகனாகிய கென், பத்தாம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதிலிருந்து இந்தக் கதை தொடங்குகிறது. அந்த மதிப்பெண்களுடன் எந்தப் பள்ளியில் சேர முடியும் என்ற குழப்பத்தில் இருக்கும் நிலையில், தனது மகனுக்கு இடம் கிடைக்காவிட்டால் விஷம் குடிப்பேன் என போராட்டம் செய்து, ஒரு பள்ளியில் பிளஸ் ஒன் இடத்தை பெற்றுத் தருகிறார் பாசமிகு தாயான தேவதர்ஷினி. ஆனால், அதே பள்ளியில் படிக்கும் மீனாட்சி தினேஷை முதலில் காதலிக்கும் கென், பின்னர் பிரியான்ஷி, அதன் பிறகு அனிஷ்மா என தொடர்ந்து மூவரை காதலிக்கிறார். இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு நெருங்க, தேவதர்ஷினிக்கு இதய நோய் தாக்கம் ஏற்படுகிறது. இந்த இடைவெளியில் அவரது வாழ்க்கையில் என்னென்ன சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பதையே இன்றைய இளைஞர்களை கவரும் வகையில் சுவாரஸ்யமான திரைக்கதையாக இயக்குநர் கென் உருவாக்கியுள்ளார். அவர் தானே கதாநாயகனாக நடித்திருப்பதும் இந்தப் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை சுறுசுறுப்பான நடிப்புடன் கென் வெளிப்படுகிறார். பள்ளி மாணவன் கதாபாத்திரத்திற்கு அவர் மிகவும் பொருத்தமாகத் தோன்றுகிறார். தாய்ப்பாசம், தந்தையிடம் ஏற்படும் எதிர்ப்பு, மூன்று காதல்களில் சிக்கிக் கொள்ளும் நிலை, அதனால் உருவாகும் பிரச்சினைகள், நட்பு, சண்டை, காதல் பிரிவு போன்ற பல தருணங்களில் சிறப்பாக நடித்துள்ளார். நடனத்திலும் திறமை காட்டியுள்ளார். இயக்குநராக இருந்தபோதும் தேவையற்ற உயர்த்திக் காட்டுதல் இல்லாமல் இயல்பாக நடித்திருப்பது அவருக்கு சாதகமாக உள்ளது. கதாநாயகிகளாக நடித்த மூவரும் பள்ளி மாணவிகளாக அழகாகவும் இயல்பாகவும் நடித்துள்ளனர். மீனாட்சி தினேஷ் நடிப்பில் தனித்துவமான அழகு, பிரியான்ஷியில் குறும்புத்தனம், அனிஷ்மாவில் பாசம் ஆகியவை வெளிப்படுகின்றன. மேலும், கதாநாயகனின் நண்பர்களாக வரும் நடிகர்கள் சேர்ந்து படத்திற்கு கலகலப்பையும் நகைச்சுவையையும் அதிகரித்துள்ளனர்.
கென் தந்தையாக நடித்துள்ள சுராஜ் வெஞ்சரமூடு, குடித்துவிட்டு பேசும் காட்சிகள், மனைவியிடம் காட்டும் பாசம், மகனுடன் ஏற்படும் சிறு மோதல்கள் போன்றவற்றில் சிறப்பாக நடித்துள்ளார். அவர் தமிழ் திரைப்படங்களில் நீண்ட காலம் நிலைத்து நிற்பார் எனத் தோன்றுகிறது. தாயாக நடித்த தேவதர்ஷினியும் மனதில் நிற்கும் வகையில் நடித்துள்ளார். நடிகர்கள் அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது படத்தின் வலிமையாக உள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் வழங்கிய பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு உற்சாகமான சூழலை உருவாக்குகின்றன. குறிப்பாக பாடல்கள் இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன. ஒளிப்பதிவாளர் விக்கி, பள்ளி வாழ்க்கையை இயல்பாகவும் நம்பத்தகுந்த முறையிலும் காட்சிப்படுத்தியுள்ளார். பள்ளி தொடர்பான காட்சிகள் சுவாரஸ்யமாக அமைந்திருப்பது படத்தின் முக்கிய பலமாகும். இந்தப் படம் பார்ப்பவர்களுக்கு தங்கள் பள்ளி நாட்கள், பழைய காதல் அனுபவங்கள், நண்பர்கள் ஆகியவற்றை நினைவூட்டும் என்பது உறுதி. மேலும், படம் முழுவதும் நகைச்சுவை கலந்த நடைமுறையில் நகர்வதும், அசிங்கமான அல்லது இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் சீர்மையாக கதையை எடுத்துச் சென்றிருப்பதும் இயக்குநர் கென் திறமையை வெளிப்படுத்துகிறது.
இருப்பினும், 2014 மற்றும் 2016 காலப்பகுதியில் நடைபெறும் கதையை தெளிவாகக் காட்டும் காட்சிகள் குறைவாக இருப்பது ஒரு குறையாகும். முதல் பாதியில் வேகமாக நகரும் கதை, இடைவேளைக்கு பிறகு சிறிது மந்தமாகிறது. பின்னர் உச்சக்கட்டத்துக்கு முன் மீண்டும் வேகம் பெறுகிறது. பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவன் மூன்று காதல்களில் ஈடுபடுவது சிலருக்கு மிகைப்படுத்தலாக தோன்றலாம். மேலும், சில காட்சிகள் முன்பே பல திரைப்படங்களில் பார்த்ததைப் போல இருப்பதும், உச்சக்கட்டத்தில் சிறிது செயற்கை தன்மை காணப்படுவதும் குறையாகும். பெரும்பாலான காட்சிகளில் கதாநாயகன் மற்றும் கதாநாயகிகள் பள்ளி உடையிலேயே தொடர்ந்து தோன்றுவது சலிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், ஒரு தமிழ் ஆசிரியரை குரல் மூலம் இழிவாக காட்டியிருப்பதும் கேள்விகளை எழுப்புகிறது. இத்தகைய குறைகள் இருந்தாலும், படம் முழுவதும் நிறைந்துள்ள இளையோரின் உற்சாகம் இந்த திரைப்படத்தை வெற்றியடையச் செய்கிறது.
