‘கொலைச்சேவல்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

கலையரசனை காதலிக்கும் தீபா, பெற்றோரின் எதிர்ப்பை மீறி அவரை திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு உறவினர்களின் தலையீடு இல்லாமல் கலையரசனின் குடும்பத்தினருடன் அமைதியாக வாழத் தொடங்குகிறார். இதற்கிடையில் கர்ப்பமாகும் தீபா, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் கலையரசன் அவரை ஊரைத் தாண்டியுள்ள குலதெய்வக் கோவிலுக்கு அழைத்துச் செல்கிறார்.

ஆனால் கோவிலின் எல்லைக்குள் காலடி எடுத்து வைக்கும் தருணத்திலேயே ஏதோ ஒரு விபரீதம் நடக்கப் போகிறது என்ற ஒரு அச்சத்தை தீபா உணரத் தொடங்குகிறார். சாமி தரிசனம் செய்து வீடு திரும்ப நினைக்கும் கலையரசனைச் சுற்றி அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற ஆரம்பிக்கின்றன. அந்த அபாயகரமான சூழ்நிலையிலிருந்து அவர்கள் இருவரும் தப்பித்தார்களா இல்லையா? என்பதே இந்த திரைப்படத்தின் பரபரப்பான மீதிக் கதை.

இந்த திரைப்படத்தில் கலையரசன் தனது இயல்பான மற்றும் எதார்த்தமான நடிப்பின் மூலம் படத்தை முழுவதும் தாங்கி நிற்கிறார். காதல் காட்சிகளில் அளவுக்கு மீறாத இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முந்தைய படங்களை விட இந்தப் படத்தில் அவரது நடிப்பு மேலும் சிறப்பாக அமைந்துள்ளது. கதாநாயகியாக நடித்துள்ள தீபா பாலு தனது முதல் படத்திலேயே வலுவான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார். சவாலான காட்சிகளில் நடித்துள்ளதற்காக அவருக்கு பாராட்டலாம்.

மேலும் பால சரவணன் தனது வழக்கமான பாணியில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். கஜராஜ், விஜய் சத்யா, அகரன் வெங்கட், விஜயலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை ஆகியோர் தங்களுக்குக் கிடைத்த கதாபாத்திரங்களை நன்றாக செய்துள்ளனர். வில்லனாக நடித்துள்ள ஆதவ் சந்திரா தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்துள்ளார்.

படத்தின் எதார்த்தமான கதைக்களம் முக்கிய பலமாக இருந்தாலும் சில காட்சிகளின் நீளம் சற்றுக் குறைக்கப்பட்டிருக்கலாம் என்ற உணர்வு ஏற்படுகிறது. சில காட்சிகள் தேவையற்றதாக நீளும் போல தோன்றினாலும், கிளைமாக்ஸ் காட்சி பார்வையாளர்களுக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். சாமியே வந்து சொன்னாலும் சாதி இல்லை என்பதை யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற கருத்தையும் அதேசமயம் சாதி வெறியை முற்றிலும் எதிர்க்கும் வகையில் இயக்குநர் வி.ஆர். துதிவாணன் இந்தப் படத்தை நேர்த்தியாக கொடுத்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading