‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். அதன் பின்னர் ‘காதலும் கடந்து போகும்’, ‘கவண்’, ‘ப பாண்டி’, ‘ஜூங்கா’, ‘வானம் கொட்டட்டும்’, ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ போன்ற பல தமிழ் திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். மேலும் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக ‘லியோ’ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்தது அவரை மேலும் ரசிகர்களிடையே பிரபலமாக்கியது. சமீபத்தில் அவர் நடித்த ‘ஜாலியோ ஜிம்கானா’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் தற்போது ‘ஹார்ட்டின்’ என்ற புதிய திரைப்படம் உருவாகிறது. கிஷோர் குமார் இதற்கு முன்பு குறும்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் இயக்கிய அனுபவம் பெற்றவர். இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிகர் சனந்த் நடித்துள்ளார். இவர் ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த திரைப்படத்தில் கதாநாயகிகளாக மடோனா செபாஸ்டியன் மற்றும் இமயா நடித்துள்ளனர். இதில் இமயா, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் மூலம் அவர் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ஆர். ரவீந்திரன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படம் குறித்து இயக்குநர் கிஷோர் குமார் கூறும்போது, இது ரோம்-காம் எனப்படும் நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாகிறது. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இந்தப் படம் இருக்கும். சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா, நியூயார்க் நகரில் திரைக்கதை தொடர்பான நுட்பங்களை படித்து வந்துள்ளார். அதனால் இந்தப் படத்தின் திரைக்கதையிலும் அவருடைய பங்களிப்பு இருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் இரண்டு பெண்களின் பார்வையில் சொல்லப்படும் கதையை கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.இந்நிலையில் தற்போது ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் கோடை விடுமுறை காலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
