தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் திரைப்படமாக இன்றளவும் பாராட்டப்பட்டு கொண்டாடப்படும் படைப்பாக திகழ்கிறது ‘ஆரண்ய காண்டம்’. 2011ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், பிளாக் காமெடி வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் தனித்துவமான கதை சொல்லல் முறையாலும் திரைக்கதை அமைப்பாலும் ரசிகர்கள் மத்தியில் தனி அடையாளத்தை பெற்றது. இந்த படத்தின் மூலம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை பெற்றார். அதேபோல், இந்த திரைப்படத்தின் எடிட்டராக பணியாற்றிய பிரவீன் சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதையும் பெற்றார். மேலும், தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் கிராண்ட் ஜூரி விருதையும் இந்த படம் பெற்றுள்ளது. இப்படத்தில் ஜமீன்தார் காளையன் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த குரு சோமசுந்தரம் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த திரைப்படத்தின் நினைவுகளைப் பற்றியும் தனது அனுபவங்களைப் பற்றியும் குரு சோமசுந்தரம் சமீபத்தில் வழங்கிய ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது, ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் கதை, நடிப்பு, வசனங்கள் மற்றும் திரைக்கதை அமைப்பு ஆகிய அனைத்தும் மிகச் சரியான சமநிலையுடன் ஒன்றோடொன்று இணைந்திருந்தன. அதனால் தான் அந்த படம் ஒரு கிளாசிக் தரத்தில் உயர்ந்தது என்று அவர் குறிப்பிட்டார். நாடகத் துறையில் இருந்து வந்த எனக்கு சினிமா உலகிற்கு வழிகாட்டியாக இருந்தவர் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தான் என்று அவர் தெரிவித்தார். அப்போது நான் கூத்துப்பட்டறை என்ற நாடகக் குழுவில் இருந்தேன். பல நாடகங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த காலம் அது. ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் கதையை எழுதுவதற்கு முன்பே, அதாவது படம் உருவாகும் காலத்திற்கு சுமார் ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், நான் நடித்திருந்த ‘சந்திரகிரி’ என்ற நாடகத்தை இயக்குநர் குமாரராஜா பார்த்திருந்தார். அப்போது “என் திரைப்படத்தில் உங்களை கண்டிப்பாக நடிக்க வைப்பேன்” என்று அவர் கூறியிருந்தார்.
படம் தொடங்குவதற்கு முன்பு காளையன் மற்றும் சப்பை என்ற இரண்டு கதாபாத்திரங்களுக்காகவும் நான் ஆடிஷன் கொடுத்திருந்தேன். ஆனால் இயக்குநருக்கு நான் காளையன் கதாபாத்திரத்திற்காக செய்த ஆடிஷன் மிகவும் பிடித்திருந்தது போல இருந்தது. அவருக்கும் எனக்கும் ஒரு நல்ல அலைவரிசை இருந்தது. பொதுவாக நாடகத் துறையில் இருந்து சினிமா உலகிற்கு வருகிறவர்களுக்கு பல சவால்களும் சிக்கல்களும் ஏற்படும். அந்த சவால்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதையும் சினிமாவின் வேலைபாடு எப்படி இருக்கும் என்பதையும் எனக்கு தெளிவாக கற்றுக் கொடுத்தவர் குமாரராஜாதான் என்று அவர் கூறினார். முதல் திரைப்பட அனுபவத்திலேயே சினிமாவை முழுமையாக புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த திரைப்படத்தில் என் மகனாக வரும் கொடுக்காப்புளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த வசந்த் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். அந்த படத்தில் வரும் ஒவ்வொரு வசனமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. படம் வெளியான பிறகு, காளையன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் யார், அவர் எங்கு இருக்கிறார் என்று பலரும் தேட ஆரம்பித்தார்கள். அந்த கதாபாத்திரத்தை பார்த்தவர்கள் அவர் வயதான நடிகராக இருப்பார் என்று கூட நினைத்திருந்தார்கள். ஆனால் அந்த கதாபாத்திரத்தை செய்த போது எனக்கு வயது 35 தான் என்று அவர் தெரிவித்தார். அந்த படத்தின் மூலம் தான் குரு சோமசுந்தரம் என்ற என் பெயர் திரைப்பட உலகில் பரவலாக அறியப்பட ஆரம்பித்தது.
திரைப்பட விழாக்களில் இந்த திரைப்படம் திரையிடப்படும் போது பலரும் என்னிடம் வந்து இந்த கதாபாத்திரத்தை நீங்கள் எப்படி வடிவமைத்தீர்கள்? என்று ஆர்வத்துடன் கேட்பார்கள். காளையன் கதாபாத்திரம் பேசும் விதம், குரலின் தாளம் எப்படி இருக்க வேண்டும் என்பதனை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா மிகத் தெளிவாக விளக்கிக் கொடுத்தார். அவர் கூறியபடியே நான் அந்த கதாபாத்திரத்தை உருவாக்கினேன். படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்த பிறகும் மீண்டும் அந்த திரைப்படத்தைப் பற்றியும் அதன் நினைவுகளைப் பற்றியும் பேசுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தின் மூலம் எனக்கு கிடைத்த அனைத்து பாராட்டுகளும் உண்மையில் இயக்குநருக்கே சேரும் என்று குரு சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
