பிரபல நடிகை மதுபாலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறாரா கியாரா அத்வானி?

பிரபல பாலிவுட் நடிகையான மதுபாலா, குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்படப் பயணத்தை தொடங்கியவர். அதன் பிறகு 1950களில் பாலிவுட் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்து பெரும் புகழைப் பெற்றார். ‘நீல் கமல்’, ‘அமர்’, ‘சல்தி கா நாம் காடி’ உள்ளிட்ட பல முக்கியமான படங்களில் நடித்துள்ள அவர், தனது திரைப்பட வாழ்க்கையில் சுமார் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற இவர், துரதிருஷ்டவசமாக தனது 36வது வயதிலேயே மரணமடைந்தார்.

இவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பல ஆண்டுகளாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் பட்ஜெட் உள்ளிட்ட சில காரணங்களால் இந்த திட்டம் பலமுறை தள்ளிப்போனது. தற்போது, மதுபாலாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் பயோபிக் திரைப்படம் மீண்டும் உருவாக்கப்பட உள்ளது. இந்த திரைப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார். இயக்குநராக ஜஸ்மீத் கேரீன் பொறுப்பேற்றுள்ளார்.

ஜஸ்மீத் கேரீன் இதற்கு முன்பு ஆலியா பட் நடித்த ‘டார்லிங்ஸ்’ திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மதுபாலா கதாபாத்திரத்தில் நடிகை கியாரா அத்வானி நடிக்க இருப்பதாக சில செய்திகளும் பரவி வந்தன. ஆனால் அந்த தகவல்களை தற்போது படக்குழு மறுத்துள்ளது.

இதுகுறித்து படக்குழு தரப்பில் விளக்கம் அளிக்கும்போது, “மதுபாலா கதாபாத்திரத்தில் கியாரா அத்வானி நடிக்கிறார் என்று வெளியாகும் தகவலில் எந்த உண்மையும் இல்லை. அந்த தகவல்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை” என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் மதுபாலா கதாபாத்திரத்தில் யார் நடிக்க உள்ளார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading