‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் மீண்டும் தனது விருப்பமான கார் பந்தய உலகில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். கார் பந்தய போட்டிகளுக்கான முன் தயாரிப்புகள் மற்றும் தீவிர பயிற்சிகளை மேற்கொள்ளும் நோக்கில் அவர் துபாயில் தங்கி இருந்தார். அந்த காலகட்டத்திலேயே அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் போர் நிலை தீவிரமடைந்தது. அதன் ஒரு பகுதியாக ஈரான் ராணுவம் துபாயில் உள்ள அமெரிக்க ஆதரவு நிறுவனங்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த போர்த் தாக்குதல்களால் உருவான பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா முன்பு விளக்கம் அளித்திருந்தார். இதனால் ரசிகர்களிடையே ஏற்பட்ட கவலைகள் ஒரு அளவு குறைந்தன.
இந்த நிலையில், துபாயில் இருந்து நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் வந்தடைந்த அவர், அங்கிருந்து காரில் தனது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். இந்த தருணத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது. போர் சூழ்நிலையிலிருந்து அவர் பாதுகாப்பாக தாய்நாடு திரும்பிய செய்தி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
