தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் ஜூனியர் என்டிஆர். சமீபத்தில் அவர் பெங்களூருவில் நடைபெற்ற ஒரு புதிய மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, தனது வாழ்க்கையில் ஏற்பட்ட சில வேதனையான அனுபவங்களையும் ஜூனியர் என்டிஆர் பகிர்ந்துகொண்டார். “என்னுடைய அண்ணனையும், அப்பாவையும் நான் சாலை விபத்தில் இழந்திருக்கிறேன். அதேபோல் நானும் ஒருமுறை ஒரு கடுமையான விபத்தில் சிக்கி, மரணத்தின் விளிம்பிற்கு சென்று மீண்டு வந்தேன். அதனால் வாகனம் ஓட்டும் போது மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து அனைவரும் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். பல நேரங்களில் ஒருவரின் கவனக்குறைவு மற்றவர்களின் குடும்பத்திற்கு பெரிய துயரத்தை ஏற்படுத்தி இருக்கலாம். அதனால் வாகனம் ஓட்டும் ஒவ்வொரு தருணத்திலும் உங்கள் குடும்பத்தினரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்குள் தானாகவே ஒரு பொறுப்புணர்வை உருவாக்கும்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் தொடர்ந்து பேசும்போது, “விழிப்புணர்வு என்பது ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம். எங்கள் குடும்பத்தில் நடந்த அந்த துரதிர்ஷ்டமான சம்பவங்கள் உங்கள் குடும்பத்தில் எப்போதும் நடைபெறக்கூடாது என்று நான் விரும்புகிறேன். அதேபோல் தயவுசெய்து போதைப் பொருட்களுக்கு ‘Say No to Drugs’ என்று சொல்லுங்கள். பொறுப்பு உணர்வு என்பது ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இருக்க வேண்டும். இந்தச் செய்தி உங்களுக்குள் அந்த பொறுப்புணர்வை உருவாக்கும் என நான் நம்புகிறேன். இந்த நாட்டின் நல்ல குடிமகனாக அனைவரும் வாழ வேண்டும்” என்று ஜூனியர் என்டிஆர் தனது உரையில் வலியுறுத்தினார்.
