சுனைனா நடித்திருந்த ‘ட்ரிப்’, யோகி பாபு மற்றும் இனியா நடித்த ‘தூக்குதுரை’ படங்களுக்குப் பிறகு இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் புதிய திரைப்படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’. இந்தப் படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடித்துள்ளார்.இந்தத் தலைப்பின் பொருள் குறித்து இயக்குனரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, சேலம் பகுதியைச் சேர்ந்த ஒரு சாதாரண வியாபாரியாக செல்வராகவன் இந்தப் படத்தில் நடித்துள்ளார். அவருடைய வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களையும், தனது கிராமத்தையும் ஒரு சிறுமியையும் காக்க அவர் எடுக்கும் முயற்சிகளையும் மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக குஷி நடித்துள்ளார். மேலும் செல்வராகவனின் அக்கா கதாபாத்திரத்தில் நடிகை கௌசல்யா நடித்துள்ளார். இந்தக் கதாபாத்திரத்திற்காக செல்வராகவன் சுமார் 10 கிலோ எடையை குறைத்ததாகவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பின் எந்த கட்டத்திலும் அவர் இயக்கத்தில் தலையிடாமல், முழுமையாக ஒரு நடிகராக மட்டுமே செயல்பட்டார் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும், கௌசல்யா இந்தக் கதாபாத்திரத்திற்காக தனது தோற்றத்தை மாற்றிக் கொள்ள ‘டல்’ மேக்கப் பயன்படுத்தியுள்ளார். பல வெற்றி படங்களில் கதாநாயகியாக நடித்திருந்த கௌசல்யா, இந்தக் கதைக்காக அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். சமூகச் செய்தியுடன் இணைந்து, கணவன்–மனைவி உறவின் பாசத்தையும் இந்தப் படம் வலியுறுத்துகிறது. சேலம் பகுதியைச் சேர்ந்த பல உள்ளூர் நடிகர்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
