‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படத்தை இயக்கிய ரா. கார்த்திக் தற்போது நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ள ‘மேட் இன் கொரியா’ என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இந்த படம் குறித்து இயக்குநர் ரா. கார்த்திக் கூறுகையில், கொரியாவுக்கு செல்லும் ஒரு தமிழ் பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை என்பதால், தென் கொரியாவிற்கு சென்று சுமார் ஒன்றரை மாதங்கள் படப்பிடிப்பு நடத்தினோம். அந்த நாட்டைச் சேர்ந்த பல நடிகர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். அங்கு உள்ள சட்டப்படி நடிகர்கள் வாரத்திற்கு 52 மணி நேரம் மட்டுமே பணிபுரிய முடியும். அந்த விதிமுறையை கருத்தில் கொண்டு திட்டமிட்டு படப்பிடிப்பை முன்னெடுத்தோம்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “கொரியாவில் பெரும்பாலானவர்களுக்கு ஆங்கிலம் அதிகம் தெரியாது. அதனால் வசனங்களை ஒரு செயலியின் மூலம் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தோம். எங்கள் குழுவில் கொரிய மொழியும் ஆங்கிலமும் தெரிந்த ஒருவரையும் உதவிக்காக வைத்திருந்தோம். கொரிய தலைநகரான சியோலில் இந்திய உணவு கிடைத்தாலும், நான் கொரிய உணவுகளை மிகவும் விரும்பி சாப்பிட்டேன்,” என்று கூறினார்.
“இந்த திரைப்படம் 14 மொழிகளில் வெளியாகிறது. மேலும் 35 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வருகிறது. ஓடிடி தளத்தில் வெளியாகும் காரணத்தால் இது போன்ற விஷயங்கள் சாத்தியமாகிறது. நடிகை பிரியங்கா மோகன் இந்த படத்திற்கு மிகுந்த ஒத்துழைப்பை வழங்கினார். அங்கு காலநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தது. மலைப்பகுதி, பனி, வெயில் போன்ற சூழ்நிலைகளிலும் அவர் ஓய்வு நேரங்களில் கூட நடித்துக்கொடுத்து உதவினார்,” என்று தெரிவித்துள்ளார்.
அதோடு அவர் மேலும் கூறுகையில், “தமிழகத்திலும் இந்தியாவிலும் கொரிய திரைப்படங்கள், கொரிய நாடகங்கள் மற்றும் கொரிய பாடல்களுக்கு மிகுந்த ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்துக்கும் கொரியாவுக்கும் பழமையான காலத்திலிருந்தே நல்ல தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும். கொரிய நாடகங்களை மிகவும் விரும்பும் என் மனைவியின் தாக்கத்தினால்தான் இந்த கதையை உருவாக்கினேன். படப்பிடிப்பின் போது கொரிய நடிகர்களுக்கு ‘தளபதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ என்ற பாடலையும் கற்றுக்கொடுத்தோம். அவர்கள் அதனை ரசித்து பாடியதும் மிகவும் மகிழ்ச்சியளித்தது,” என்று கூறினார்.
