இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷின் 55வது திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், ஆர் டேக் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன. மேலும் இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்மூட்டி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல் கதாநாயகிகளாக நடிகைகள் ஸ்ரீ லீலா மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்து வருகின்றனர். இந்த கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கடந்த சில வாரங்களாக சென்னை நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. படக்குழு தற்போது முக்கியமான காட்சிகளை படமாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் இந்த படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் மற்றும் சாய் பல்லவியுடன் சேர்ந்து ‘ஹிட் 3’ திரைப்படத்தில் நடித்த நடிகர் சைத்து ஜொனலகட்டா என்பவரும் இணைந்து நடித்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இவர் தெலுங்கு நடிகர் சித்து ஜொனலகட்டாவின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
