நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், புதிய இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் ‘தாய் கிழவி’. இந்த திரைப்படத்தில் நடிகை ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் சிங்கம்புலி, முனீஸ்காந்த், அருள்தாஸ், பாலசரவணன், இளவரசு மற்றும் ரேச்சல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மதுரை பின்னணியை மையமாகக் கொண்டு கிராமத்து வாழ்க்கை முறையையும் உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் வெளியான பிறகு இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு தொடர்பான ஒரு முக்கியமான சமூக பிரச்சினையை இந்த படம் பேசுவதால் அது பாராட்டுகளை பெற்றுள்ளது. கதையின் உணர்ச்சி மற்றும் சமூக கருத்து ஆகிய இரண்டும் இணைந்து ரசிகர்களை ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
திரைப்படம் வெளியானது முதல் வசூலிலும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. முதல் மூன்று நாட்களிலேயே இந்த படம் சுமார் ரூ.22 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைத்ததால், கடந்த 10 நாட்களில் இந்த திரைப்படம் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை 50க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றில் சில திரைப்படங்களே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ மற்றும் ‘வித் லவ்’ திரைப்படங்களைத் தொடர்ந்து ‘தாய் கிழவி’ திரைப்படமும் அனைத்து தரப்பினருக்கும் லாபத்தை வழங்கிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
