‘ஜனநாயகன்’ படத்திற்கு தொடரும் சிக்கல்? வெளியான புது தகவல்!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் அவரது கடைசி படம் என அறிவிக்கப்பட்டதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வெளியீட்டிற்கு முன்பு ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. முக்கியமாக, இந்த திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல், அது மறுஆய்வுக்காக பரிந்துரைக்கப்பட்டது. இதனால் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, படத்தை தயாரித்துள்ள கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு தயாரிப்பு நிறுவனத்திற்கு சாதகமாக அமையாததால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. அதே நேரத்தில், தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்காக படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

அதன்படி, ரிவைசிங் கமிட்டி இன்று படத்தை பார்ப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று திடீரென அந்த நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கமிட்டி உறுப்பினர்களில் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இந்த ஆய்வு நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இன்று பிற்பகல் 2 மணிக்கு படம் பார்ப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் வரும் 17ஆம் தேதி மறுஆய்வு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading