நடிகர் தனுஷ் நடித்த ‘வாத்தி’ மற்றும் துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் சூர்யா தற்போது ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இது சூர்யாவின் 46வது திரைப்படமாகும். இந்த படத்தை தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கிறார். இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் மற்றும் பவானி ஸ்ரீ ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில் ஒரு குழந்தையுடன் சூர்யா நடந்து செல்லும் காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த போஸ்டர் மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்த ‘கங்காரு’ திரைப்படத்தின் போஸ்டரை ஒத்ததாக இருந்ததால், இது அந்த படத்தின் ரீமேக் ஆக இருக்கலாம் என்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவின.
2007ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘கங்காரு’ திரைப்படத்தை ராஜ் பாபு இயக்கியிருந்தார். அந்த படத்தில் ஜெயசூர்யா மற்றும் காவ்யா மாதவன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த தகவல்களை ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படக்குழு மறுத்துள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதிய ஒரிஜினல் கதையை அடிப்படையாகக் கொண்டு தான் இந்த படம் உருவாகி வருகிறது என்றும், இது எந்த மலையாள திரைப்படத்தின் ரீமேக்கும் அல்ல என்றும் படக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.
