இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படம் ‘ஆரண்ய காண்டம்’ . 2011ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை எஸ்.பி.பி. சரண் தயாரித்திருந்தார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜ், யாஷ்மின் பொன்னப்பா, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வித்தியாசமான கதை சொல்லும் முறையாலும், கதாபாத்திரங்களை வடிவமைத்த விதத்தாலும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த திரைப்படத்தில் கமர்சியல் அம்சங்கள் இருந்தாலும், கதாபாத்திரங்களை எழுதிய விதம், தந்தை–மகன் உறவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை ஆகியவை மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன. தனது முதல் திரைப்படத்திலேயே வித்தியாசமான கதை சொல்லும் திறனை வெளிப்படுத்திய இயக்குநராக தியாகராஜன் குமாரராஜா கவனம் பெற்றார். ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படம் நியூயார்க்கில் நடைபெற்ற தெற்காசிய சர்வதேச திரைப்பட விழாவில் பரிசை வென்றது. மேலும் இந்த திரைப்படம் சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதுகளையும் பெற்றது. இதனால் இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான படைப்பாக பார்க்கப்படுகிறது.
இன்றுவரை ‘ஆரண்ய காண்டம்’ தமிழ் திரைப்படங்களில் சிறந்த படங்களில் ஒன்றாக ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டபடுகிறது . ரசிகர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்களிடையே கவனத்தை ஈர்த்த இந்த திரைப்படம் வரும் 13ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ‘பாக்கெட் நாவல்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
