கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘டாடா’ திரைப்படத்தை இயக்கியவர் கணேஷ் கே. பாபு. தற்போது அவர் நடிகர் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய திரைப்படத்தை தயாரித்து வருகிறார். தினா ராகவன் எழுதி இயக்கும் இந்த படம், கவுதம் ராம் கார்த்திக்கின் 19-வது திரைப்படமாகும். கணேஷ் கே. பாபு புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஆரம்பத்தில் ஜி.ஆர்.கே 19 என்ற தற்காலிகப் பெயர் வைக்கப்பட்டு கடந்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு இயக்குநர் ராஜூமுருகன் வசனம் எழுதியுள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, கணேஷ் கே. பாபு மற்றும் சௌமியா பாரதி ஆகியோர் எழுதியுள்ளனர்.
இந்நிலையில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் அவரது 19-வது திரைப்படத்தின் டைட்டில் டீசரை இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த படத்திற்கு ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
