சாய் அபயங்கர் “கட்சி சேரா”, “ஆச கூட” போன்ற இன்டீ ஆல்பம் பாடல்கள் மூலம் இசை ரசிகர்களிடையே மிகுந்த கவனத்தை பெற்றார். இந்த பாடல்கள் வெளியான பிறகு பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக அவரது இசையமைப்பில் உருவான முதல் திரைப்படமாக ‘டியூட்’ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து ‘கருப்பு’, ‘மார்ஷல்’, இயக்குனர் அட்லி இயக்கி வரும் படம், இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம், மேலும் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் மூலம் குறுகிய காலத்திலேயே பல முக்கிய திரைப்படங்களில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
தமிழ் திரையுலகில் புதுமையான இசை பாணியால் வேகமாக முன்னேறி வரும் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். இன்டீ பாடல்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், அண்மைக்காலத்தில் பல பெரிய திரைப்படங்களுக்கும் இசையமைத்து தனது தனித்துவமான இசை அடையாளத்தை உருவாக்கி வருகிறார்.
இந்த நிலையில், சாய் அபயங்கர் தனது அடுத்த இன்டீ பாடலை தற்போது வெளியிட்டுள்ளார். “பவழ மல்லி” என தலைப்பிடப்பட்டுள்ள இந்த பாடலுக்கு பாடலாசிரியர் விவேக் வரிகளை எழுதியுள்ளார். மேலும் இந்த பாடலை நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். சாய் அபயங்கரின் இசையில் உருவான இந்த புதிய பாடல் இணையத்தில் வெளியாகியவுடன் ரசிகர்களிடையே வேகமாக பரவி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
