நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ரியோ ராஜ். அதன் பின்னர் ‘பிளான் பண்ணி பண்ணனும்’, ‘ஜோ’, ‘ஆண்பாவம் பொல்லாதது’ போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த அவர், தனக்கென ஒரு ரசிகர் மனதில் தனி இடம் பிடித்துள்ளார். தற்போது ‘ராம் இன் லீலா’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில், ரியோ ராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் ஆரம்பித்துள்ள தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘ரிவர் ரூட் ஸ்டுடியோஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சுயமாக திரைப்படங்களை உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் ரியோ ராஜ் தானே கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் இணையத்தில் பிரபலமான நிஷாந்த் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு எடிட்டராக வருண் கே.ஜி பணியாற்றுகிறார். இப்படம் தொடர்பான அறிவிப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு காணொளியையும் ரியோ ராஜ் வெளியிட்டுள்ளார்.
