மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘கெணத்த காணோம்’. இந்தப் படத்தில் அவர் கிராமத்து கோயிலின் பூசாரியாக தோன்றுகிறார். லவ்லின் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா, சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். தற்போது அவரது நண்பர்கள் இணைந்து இந்த திரைப்படத்தை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய யோகி பாபு, “’ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படத்திலேயே நான் கதாநாயகனாக நடிக்க வேண்டியது. ஆனால் அந்த நேரத்தில் கதாநாயகனாக நடிக்கத் தயங்கினேன். சிறிய கதாபாத்திரத்தில் கூட நடிக்கலாம் என்று நினைத்தேன், ஆனால் அது கூட அமையவில்லை. அதன் பின்னர் ‘கெணத்த காணோம்’ திரைப்படத்தில் என்னை கதாநாயகனாக நடிக்க வைத்தவர் ‘காக்கா முட்டை’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் சங்கையா தான்” என்று கூறினார்.
மேலும் அவர், “நானும் லொள்ளுசபா ராம் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பல சிரமங்களை சந்தித்து தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். தொடர்ந்து உதவி இயக்குநர்களுக்கு ஆதரவு அளிக்கத் தயார். தற்போது கூட என் கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு உதவி இயக்குநர் திரைப்படம் இயக்கி வருகிறார். சுரேஷ் சங்கையா அவர்களின் குடும்பத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்” என்று கூறி, மேடையிலேயே காசோலை ஒன்றை எழுதி கையொப்பமிட்டு அவரது மனைவியிடம் வழங்கினார். இந்தப் படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படும் ஒரு கிராமத்தில் கிணறு தோண்டும்போது கிடைக்கும் விஷயம் மற்றும் அதனால் எழும் பிரச்சினைகள் என்பதையே மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.
